சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (22.06.2026) பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் சென்னை அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் த.சரத்குமார் தலைமையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய முதன்மைத் தேர்வுப் பயிற்சிக்கான துவக்க நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர் முதன்மைத் தேர்வுப் பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்ட ஆர்வலர்களுடன் கலந்துரையாடினார். அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்று, குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 81 ஆர்வலர்களை அமைச்சர் பாராட்டினார். பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் ஆர்வலர்களுக்கு பயனுள்ளதாக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும், மேலும் அண்ணா நகரில் கட்டப்பட இருக்கும் பயிற்சி மையத்தில் வருங்காலத்தில் அதிகளவில் ஆர்வலர்கள் சேர்க்கப்படுவர் என அமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாட்டு மாணவர்கள் அதிக அளவில் குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்று, இந்திய அளவில் உயர்ந்த ஆட்சிப் பொறுப்புகளை வகிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு அதற்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடல் நிகழ்வின் போது மனிதவள மேலாண்மைத் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் சி.சமயமூர்த்தி, அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரி, இயக்குநர்/பயிற்சித் துறைத் தலைவர் ச.கோபால சுந்தரராஜ், கூடுதல் இயக்குநர் (போட்டித்தேர்வுகள்) முனைவர்.தே.சங்கர சரவணன், பயிற்சி மைய முதல்வர் கா.காயத்திரி சுப்பிரமணி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.