சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள இறால் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு காரணமாக, அங்கு பணியாற்றி தங்கியிருந்த 74 நபர்கள் (70 பெண்கள், 4 ஆண்கள்) பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்தில் துரதிருஷ்டவசமாக 5 பெண்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேட்டறிந்து முதல்-அமைச்சர் மிகவும் வேதனை அடைந்து, அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்வதோடு, முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவின் காரணமாக பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளர்களை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.