தமிழக செய்திகள்

ரூ.15.88 கோடியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

மழைநீர் வடிகால், பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட பணிகளை சேகர்பாபு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, இன்று (12.02.2026) திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூபாய் 15.88 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால், பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடம் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் உள்ளிட்ட பணிகளை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர், பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், பெரம்பூர் பிரதான சாலையில் மூலதன நிதியின் கீழ், ரூபாய் 11.75 கோடி மதிப்பீட்டில் வார்டு-70ல் ராகவன் தெரு முதல் பெரம்பூர் நெடுஞ்சாலை வரை 756 மீட்டர் தூரத்திற்கும், வார்டு-71ல் பெரம்பூர் பிரதான சாலை முதல் பாரதி சாலை சந்திப்பு மற்றும் பிபி சாலை வரை 1,012 மீட்டர் தூரத்திற்கும் மற்றும் வார்டு-74ல் சுரங்கப்பாதை சந்திப்பு முதல் ஏகாங்கிவுரம் கானல் சந்திப்பு வரை 350 மீட்டர் தூரத்திற்கும் என மொத்தம் 2,118 மீட்டர் தூரத்திற்கு புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, வார்டு-71க்குட்பட்ட பெரம்பூர், வடிவேலு 2வது குறுக்குத் தெருவில் மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ், ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடத்திற்கான பணி மற்றும் வார்டு-75க்குட்பட்ட ஏ.கே. சாமி நகர், 9ஆவது தெருவில் மூலதன நிதியின் கீழ், ரூபாய் 3.63 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் கட்டுமானப் பணி ஆகியவற்றை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் மேயர் ஆர்.பிரியா, மண்டலக்குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் புனிதவதி எத்திராசன், சி.ஶ்ரீதணி, எல்.ரமணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.