காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் இன்று நேரில் ஆய்வு செய்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் ப.வெங்கடரமணன், இன்று (04.06.2026) காலை காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், உமையாள் பரணஞ்சேரி அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் (DPC No.2061) மற்றும் வடக்குப்பட்டு அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் (DPC No.6221) ஆகிய இரு கொள்முதல் மையங்களை நேரில் ஆய்வு செய்தார்.
இவ்வாய்வில் அப்பகுதியைச் சேர்ந்த சில விவசாயிகள் நேரடி கொள்முதல் மையங்களுக்கு நெல் மணிகளைக் கொண்டு வந்து விற்பனைக்காகக் காத்திருந்தனர். அமைச்சர் அவ்விவசாயிகளை நேரில் சந்தித்து நெல் கொள்முதல் குறித்த பணியாளர்களின் செயல்பாடுகள், கொள்முதல் கால நேரம், நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு ஏற்றுதல், இறக்குதல் குறித்த சிரமங்கள், வசதிகள், சாக்குப்பை இருப்புகள், ஈரப்பதம் பார்க்கும் இயந்திரத்தின் செயல்பாடுகள், நெல் மூட்டைகளின் வருகைப் பதிவேடு, சிட்டா அடங்கல் குறித்த விவசாயிகளின் கோரிக்கைகளைகயும், கருத்துகளையும் கேட்டறிந்தார். இக்கொள்முதல் மையங்களில் வேலை செய்யும் கூலி ஆட்கள் டெல்டா மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்டதாக அறிந்துக்கொண்டார்.
மேலும், நேரடி நெல் கொள்முதல் மையங்களில் கட்டாயம் இருக்க வேண்டிய புகார் பெட்டிகள், விளம்பரப் பலகைகள், தர ஆய்வு கருவிகள் பராமரிக்கப்படவில்லை என்பதைக் கண்டறிந்தார். அத்தருணத்தில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறந்த வெளியில் இருந்த காரணத்தினால் மாடுகளால் நெல் மணிகள் சேதம் ஏற்படுவதையும் நேரில் கண்டறிந்தார். மேலும், அங்கிருந்த விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் மையத்திற்கு சுற்றுச் சுவர், கம்பி வேலி, உலர் களம் மற்றும் குடிநீர் வசதி, கழிவறை உள்ளிட்டவற்றை அமைத்துத் தர வேண்டி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த ஆய்வு நண்பகல் 1 மணி அளவில் முடிவுற்றது. இந்த ஆய்வின் போது சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர். உள்ளுர் ஆட்களை வைத்து கொள்முதல் செய்து கிடங்குகளுக்கு அனுப்பும் பணிகளை மேற்கொள்ளவும், விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து நிறைவேற்றிடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.