தமிழக செய்திகள்

மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவில் ரூ.12.22 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணி: அமைச்சர் வெங்கடரமணன் ஆய்வு

சென்னை மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் உள்ள உடற்பயிற்சி உபகரணங்களை முறையாக பயன்படுத்தவும், தூய்மையாக வைத்துக்கொள்ளவும், மேற்பார்வையாளருக்கு தமிழக அமைச்சர் ப.வெங்கடரமணன் அறிவுறுத்தினார்.

சென்னை,

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு தமிழக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ப.வெங்கடரமணன், தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் உத்தரவுப்படி, மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் இன்று காலை 11 மணியளவில் மயிலாப்பூரில் 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் ரூ.12.22 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார்.

மேலும் அவர், இப்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடங்களைப் பார்வையிட்டு, உடற்பயிற்சி உபகரணங்களை முறையாகப் பயன்படுத்தவும், தூய்மையாக வைத்துக்கொள்ளவும், மேற்பார்வையாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் அறிவிப்புப் பலகைகளை வைக்கவும் அவர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது விரைவில் இப்பூங்காவினை பொது மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இதுகுறித்த தொடர் நடவடிக்கைளை உடனுக்குடன் தெரிவிக்குமாறும் மாநகராட்சி அலுவலர்களையும், ஒப்பந்ததாரர்களையும் அமைச்சர் வெங்கடரமணன் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது சென்னை பெருநகர மாநகராட்சியின் உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.