தமிழக செய்திகள்

மார்பக புற்றுநோயின் அறிகுறிகளை கண்டறியும் பரிசோதனை வாகனம் - அமைச்சர் வெங்கடரமணன் தொடங்கி வைத்தார்

மகளிர் பயன்பாட்டிற்காக மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் கண்டறியும் நடமாடும் மேமோகிராம் பரிசோதனை வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மார்பக புற்றுநோயின் அறிகுறிகளை கண்டறியும் பரிசோதனை வாகனத்தை அமைச்சர் வெங்கடரமணன் இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“இன்று (25.06.2026) ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் லயன்ஸ் கிளப் மற்றும் கே.வி.ஜி.டிரஸ்ட் ஆகியோர் இணைந்து மகளிர் பயன்பாட்டிற்காக உருவாக்கி உள்ள மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள் கண்டறியும் நடமாடும் மேமோகிராம் பரிசோதனை வாகனத்தை (Mobile Mammogram), தமிழக அரசின் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்விற்கு முன்னதாக, பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் உடல்நலத்தினை பேணுவதன் முக்கியத்துவம், பெண்கள் மீதான அக்கறையினை ஆண்கள் வெளிப்படுத்துவதன் அவசியம், மார்பக புற்றுநோய் பரிசோதனையினை பெண்கள் செய்து கொள்வதன் தேவை ஆகியவை குறித்து அமைச்சர் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், காவேரி மருத்துவமனை இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர்.அரவிந்தன், மருத்துவ இயக்குநர் டாக்டர். அய்யப்பன் பொன்னுசாமி, லயன்ஸ் கிளப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.