தமிழக செய்திகள்

டாஸ்மாக் கடையடைப்பு; நேற்று 10 லட்சம் பேராவது குடிக்காமல் இருந்திருப்பார்கள் என்பதில் எனக்கு சந்தோஷம் - அமைச்சர் விக்னேஷ்

டாஸ்மாக் பணியாளர்கள் கடையில் இருக்கும்போது மட்டும் சீருடையை அணிந்து கொண்டால் போதும் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் மொத்தம் 4,040 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1-ந்தேதி(நேற்று) முதல் காலி மதுபாட்டில்களுக்கு 10 ரூபாய் திரும்ப கொடுக்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்களுக்கு நிர்வாகம் அறிவித்து இருந்தது.

கடையடைப்பு போராட்டம்

ஆனால் இந்த உத்தரவை செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் திடீர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால், தமிழகம் முழுவதும் 460 கடைகள் அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே டாஸ்மாக் கடைகளை திறக்காவிட்டால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் எச்சரித்திருந்தார்.

அமைச்சர் விக்னேஷ் பேட்டி

இந்த நிலையில், அமைச்சர் விக்னேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது டாஸ்மாக் கடையடைப்பு போராட்டம், டாஸ்மாக் பணியாளர்களுக்கான சீருடை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர் பேசியதாவது;-

“த.வெ.க. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பளத்தை 14 ஆயிரம் ரூபாயில் இருந்து 33 ஆயிரம் ரூபாய் வரை கொண்டு வந்திருக்கிறோம். வாரத்தில் ஒருநாள் வார விடுமுறை, மாதத்தில் 2 நாட்கள் விடுமுறை, இலவச சீருடை கொடுத்திருக்கிறோம், சீருடையை தைப்பதற்கு ரூ.6,000 கொடுத்திருக்கிறோம், பண்டிகை காலங்களுக்காக ரூ.20,000 கொடுக்கிறோம், கடன், மருத்துவக் காப்பீடு என டாஸ்மாக் பணியாளர்களுக்காக நிறைய திட்டங்களை செய்து கொடுத்துள்ளோம்.

சீருடை

டாஸ்மாக் பணியாளர்கள் கடையில் இருக்கும்போது மட்டும் சீருடையை அணிந்து கொண்டால் போதும். உண்மையான ஊழியர் யார் என்பதை அறிவதற்காகவே சீருடை வழங்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் பணியாளர்கள் கண்ணியமாக மதிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் நான் முயற்சிகளை செய்து வருகிறேன். அந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்.

சந்தோஷம்

நேற்று டாஸ்மாக் கடையடைப்பால் அரசுக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டிருந்தாலும், சுமார் 10 லட்சம் பேராவது நேற்று குடிக்காமல் இருந்திருப்பார்கள், 150 ரூபாயை அவர்களின் குடும்பத்திற்கு கொடுத்திருப்பார்கள் என்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு சந்தோஷம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT