அம்பத்தூர்,
கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி இன்று (20.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலத்தில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி அம்பத்தூர் மண்டலம், வார்டு-88 ரூ.23 கோடி மதிப்பீட்டில் 2,400 மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது அமைச்சர் 2,070 மீட்டர் நீளத்திற்கு பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள 330 மீ நீளத்திற்கு பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், வார்டு-84க்குட்பட்ட கொரட்டூர் பகுதியில் செயல்பட்டு வரும் மழைநீர் உந்து நிலையத்தை பார்வையிட்டு, மழைநீர் தங்குதடையின்றி சீராகச் செல்வதை ஆய்வு செய்து, கண்காணிப்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ச்சியாக, வார்டு-79ல் அம்பத்தூர் முதல் ரெட்ஹில்ஸ் வரை செல்லும் நெடுஞ்சாலையில் அம்பத்தூர் ராக்கி திரையரங்கம் அருகில் சாலையில் தேங்கிய தண்ணீர் ஜெனரேட்டர் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருவதை பார்வையிட்டு மழைநீர் வடிந்தவுடன் உடனடியாக சாலையை சீர்செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின் போது அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன், மாநகராட்சி ஆணையர் சமீரன், மத்திய வட்டார துணை ஆணையர் கௌஷிக், மண்டல அலுவலர் தணிகை வேலன் மற்றும் செயற்பொறியாளர்கள் முத்துகுமாரசுவாமி, சங்கரன் உட்பட பலர் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.