தமிழக செய்திகள்

வேளாண் பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள் குறித்து அமைச்சர் வினோத் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்து அமைச்சர் வினோத் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

வேளாண்மை உழவர்நலத்துறை அமைச்சர் வினோத் தலைமையில், வேளாண்மை - உழவர்நலத்துறையின் பட்ஜெட், மானியக் கோரிக்கை தொடர்பாக 2026-2027 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் துறையின் பல்வேறு வேளாண்மை சார்ந்த நலதிட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

ஆய்வு

“தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் அறிவுரையின்படி வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் இன்று 19.11.2026 நடப்பு 2026-27 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை தொடர்பான செயல்பாடுகள் குறித்து, வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, சர்க்கரைத் துறை, விதைச்சான்று மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறை, தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை ஆகிய துறைகள் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

அறிவுரை

ஆய்வின்போது, இந்நிதியாண்டில், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வருமானம் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்ந்து அவற்றைத் திறம்பட செய்து முடித்திடத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுரைகளை வழங்கினார்கள்.

விழிப்புணர்வு

மேலும், வேளாண்மை உழவர் நலத்துறையின்கீழ் செயல்படுத்தப்படும் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களை விவசாயிகள் அறிந்து பயனடையும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் திட்டப்பயனாளிகளைத் தேர்வு செய்வதில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வேளாண்மை நலத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறையின், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் நா.வெங்கடேஷ், சர்க்கரைத்துறை ஆணையர் ஆர்.கண்ணன், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் சந்திர சேகர் சாகமூரி, வேளாண்மை துறை இயக்குநர் முனைவர் க.வீ.முரளிதரன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் முனைவர் ஜெ.விஜயா ராணி, வேளாண்மை உழவர் நலத்துறையின் அரசு இணைச் செயலாளர் கு.ரவிகுமார், தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு வளர்ச்சி முகமையின் மேலாண்மை இயக்குநர் எம்.மணிமேகலை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) மற்றும் செயல் துணை வேந்தர் முனைவர் எம்.ரவீந்திரன், வேளாண்மைப் பொறியியல் துறையின் தலைமைப்பொறியாளர் முனைவர் எம்.முருகேசன் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT