தமிழக செய்திகள்

தகப்பன் என்கிற முறையில்... சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் விஸ்வநாதன்

மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை,

மாரத்தான் போட்டியில் நடந்த சர்ச்சைக்கு அமைச்சர் விஸ்வநாதன் வருத்தம் தெரிவித்தார்.

மாரத்தான் போட்டி

முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி கடந்த 21-ந்தேதி மதுரை மாவட்டம் மேலூரில் த.வெ.க. சார்பில் அரசு பள்ளி மைதானத்தில் மாரத்தான் போட்டி நடந்தது. இதை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டி முடிந்து, அதில் ஓடி வந்த சிறுமிகள் சிலர் மேடையில் அமர்ந்து கால்களை நீட்டி இளைப்பாறி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த அமைச்சர் விஸ்வநாதன், ஒரு சிறுமியின் கால்களை அமுக்கி விட்டும், மற்றொரு சிறுமிக்கு, கால் விரல்களுக்கு சுளுக்கு எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவியது. பொது இடத்தில் சிறுமிகளின் கால்களை எப்படி தொடலாமா? என அமைச்சருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்தன.

சர்ச்சைக்கு வருத்தம்

இந்த நிலையில், இந்த சர்ச்சைக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மதுரையில் போதைப் பொருட்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் மாணவ - மாணவிகள் பங்கேற்று 4 கி.மீ. தூரம் சென்றதால் கடும் வெயிலின் காரணமாக சிலர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு நான் செய்த முதலுதவி ஊடகங்களில் தவறான நோக்கத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு பெண்ணின் தகப்பன் என்கிற முறையில் மனிதாபிமான உணர்வோடு நான் செய்த உதவிகள் தவறாக சித்தரிக்கப்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது. இப்பிரச்சினையில் எனது செயலுக்கு உள்நோக்கம் கற்பிப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஏதோ ஒருவகையில் எனது அணுகுமுறை தவறாக புரிந்து கொள்கிற நிலைமை ஏற்பட்டதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.