கனிமொழி எம்.பி 
தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு அமைச்சர்கள் அழுத்தம் கொடுக்கிறார்கள்: கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி ஆட்சியரை அழைத்து நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட அமைச்சர்களே இன்று நம்மை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள் என்று கனிமொழி எம்பி கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: குளிர்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை குறித்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறதா என்பது குறித்து இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து நாங்கள் ஏற்கனவே தெளிவாக தெரிவித்துவிட்டோம். நியாயமான தொகுதி மறுவரையறை என்பதுதான் எங்களது நிலைப்பாடு என்பதை மிகத் தெளிவாக கூறிவிட்டோம். புதிய சட்ட வரைவில் என்ன கொண்டு வரப் போகிறார்கள் என்பது தெரியாமல் திமுகவின் நிலைப்பாட்டை கூற இயலாது.

வெளிப்படையாகவே தெரிகிறது

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆட்சியருக்கு தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து அனைத்து அரசியல் தலைவர்களும் பேசி வருகிறார்கள். உண்மையில் அந்த ஆட்சியரை அழைத்து நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட அமைச்சர்களே இன்று நம்மை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள். ஏதோ சமூக ஊடகத்தில் வைக்கப்பட்ட முகாந்திரமற்ற குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்துக் கொண்டு எப்படி கேள்வி கேட்கலாம் என நம்மை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள் அதே சமயத்தில் நடந்த சம்பவம் குறித்து ஆட்சியர் பொதுவெளியில் பேச வேண்டாம் என்று அவருக்கு அழுத்தமும் தரப்படுகிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் தற்போது தலையிட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் மனித உரிமைகள் குறித்து தொடர்ந்து பேசக்கூடிய மக்கள் கண்காணிப்புக் குழு போன்ற அமைப்புகளும் இந்த விவகாரத்தை கையிலே எடுத்து அந்த ஆட்சியருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

அரசு என்ன பதில் சொல்லப்போகிறது

மறுபுறம், கள்ளக்குறிச்சி ஆட்சியர் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியிருப்பதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. உண்மையில், ஒரு மாவட்டத்தில் உள்ள பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒரு பெண்ணுக்கே இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் இன்றுவரை யாரும் பதிலளிக்காத கேள்விகளாக தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கின்றன. இதுகுறித்து நாங்கள் கேள்வி எழுப்பினால் மட்டும் தவறு என்கிறார்கள். தற்போது தேசிய மகளிர் ஆணையமே இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறது. இதற்கு இந்த அரசு என்ன பதில் சொல்லப்போகிறது.

முன்னதாக, எனக்குத் தெரிந்தவரை, காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உள்துறை அமைச்சர் தவிர, வேறு யாருக்கும் காவல் நிலையத்திற்குள் சென்று ஆய்வு நடத்துவதற்கு உரிமை கிடையாது. ஒரு மாஜிஸ்திரேட்டோ அல்லது நீதிபதியோ விரும்பினால், அங்கு நடைபெறும் நடவடிக்கைகளைப் பார்வையிடலாம். இல்லையென்றால், காவல்துறை அதிகாரிகள் மட்டுமே அங்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்.அதுதவிர்த்து அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ காவல் நிலையத்திற்குள் சென்று ஆய்வு நடத்துவதற்கோ, வழக்கின் கேஸ் டைரியைப் பார்ப்பதற்கோ, முதல் தகவல் அறிக்கை நகல்களைப் பார்ப்பதற்கோ, வழக்கில் என்னென்ன ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, வழக்கு எவ்வாறு கையாளப்படுகிறது என்பதைக் கண்காணிப்பதற்கோ சட்டப்படி எந்த உரிமையும் கிடையாது. இதுவே மிகப்பெரிய சட்ட மீறலாகும்.

அப்பட்டமான அத்துமீறல்

இந்த ஆட்சியில் பல்வேறு வகையான சட்டமீறல்களும் குற்றச்செயல்களும் நடைபெற்று வருகின்றன. தற்போது காவல் நிலையத்திற்குள்ளேயே குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன என்பதுதான் மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, பெண் காவலர்களின் செல்போன்களில் உள்ள அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாதது. இது அப்பட்டமான அத்துமீறல். அதேபோல், பல கோவில்களைக் கட்டிய சோழ மன்னர்கள்கூட தங்களை கடவுளாக நினைத்துக்கொண்டு, மற்றவர்கள் தங்களைப் போற்றிப் பாட வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. அவ்வளவு ஏன் கடவுள் நம்பிக்கை இல்லை, நான் ஒரு நாத்திகன் என்று வெளிப்படையாகச் சொன்ன தலைவர் கலைஞர் ஆட்சியில்கூட, யாரையும் கடவுளுக்கு நிகராகக் காட்டிப் போற்றியதில்லை.சொல்லப்போனால் முதன்முதலில் திருவாரூர் தேரை ஓட வைத்தது தலைவர் கலைஞர்தான். அதேபோல், கடந்த திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கான கோவில்களுக்குக் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இதே திருச்செந்தூர் கோவிலிலும் குடமுழுக்கு நடைபெற்றது.

மனதைப் புண்படுத்தும் செயல்

அப்போது, கோவிலுக்கு வரும் பக்தர்கள் எந்தவிதமான சிரமமும் இல்லாமல், வசதியாகக் குடமுழுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பிச் செல்வதற்கான ஏற்பாடுகள்தான் செய்யப்பட்டன. அங்கு இருக்கக்கூடிய அமைச்சர்களையோ அல்லது முதலமைச்சரையோ பாராட்டிப் போற்றக்கூடிய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.ஆனால், தற்போது நடைபெறும் செயல்கள், கடவுள் நம்பிக்கையும் பக்தியும் கொண்ட அத்தனை மக்களின் மனதையும் புண்படுத்தக்கூடிய ஒன்றாகும். கடவுளுக்கு நிகராக ஒருவரைக் காட்டுவதும், அவரைப் போற்றுவதும் நிச்சயமாக எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுடைய மனதைப் புண்படுத்தும் செயலாகும். இது மிகவும் தவறான செயலாகும்.

எல்லாவற்றுக்கும் வழக்குப் பதிவு செய்யும் தவெக அரசு, இதற்கு என்ன வழக்குப் பதிவு செய்யப்போகிறார்கள் என்று பார்ப்போம். இத்தனை மக்களின் மனதைப் புண்படுத்தியவர்கள் மீது யார் வழக்குப் பதிவு செய்யப்போகிறார்கள், என்ன வழக்குப் பதிவு செய்யப்போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களையும், தங்களை எதிர்த்துச் செயல்படக்கூடிய, கேள்வி கேட்கக்கூடிய தலைவர்களையும், தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய துறைகளைப் பயன்படுத்தி அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் தவெக அரசு ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தை பயன்படுத்தி சோதனைகள் நடத்துவது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது போன்ற செயல்களின் வழியே பயமுறுத்தலாம் என்று தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். ஆனால், இவை அனைத்தையும் பார்த்து திராவிட முன்னேற்றக் கழகம் எந்த நிலையிலும் பின்வாங்காது.

எதற்கும் பதில் இல்லை

மேகதாது விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் கருத்து தெரிவிக்கவில்லை என்கிறீர்கள். அவர் இதுவரை எதற்கெல்லாம் கருத்துத் தெரிவித்திருக்கிறார் என்பதைத் தயவுசெய்து எனக்குச் சொல்லுங்கள், நானும் தெரிந்துகொள்கிறேன். ஒரு மாநில முதலமைச்சர் எந்தப் பிரச்சினைக்கும் கருத்துத் தெரிவிக்காமல் இருக்கிறார். ஆனால், இங்குள்ள அமைச்சர்கள் எங்களை பார்த்து, நீங்கள் ஏன் இதற்குக் கருத்துத் தெரிவிக்கவில்லை, அதற்கு ஏன் கருத்துத் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள். நான் அவர்களிடம் கேட்பதெல்லாம் ஒன்றுதான். எந்தப் பிரச்சினைக்கும் கருத்துத் தெரிவிக்காத ஒரு முதலமைச்சர் எப்படி இருக்க முடியும்? இதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்” என்று கூறினார்.

SCROLL FOR NEXT