சென்னை,
ரூ.307.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 1,800 புதிய அடுக்குமாடி கொண்ட கோட்டூர்புரம் திட்டப்பகுதி தமிழக முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இதன் கட்டுமானப் பணிகளை குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (30.1.2026) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் ரூ.307.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 1,800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் கான்கீரிட் வீடுகளில் வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கில் முத்தமிழ் அறிஞர் கலைஞரால் குடிசைப் பகுதி மாற்று வாரியம் 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கோட்டூர்புரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டது.
அப்போது கட்டப்பட்ட குடியிருப்பின் அளவு 216 ச.அடி அளவு ஆகும். அன்றைய தினம் தரை மற்றும் 2 தளங்களுடன் 1,476 குடியிருப்புகள் கட்டப்பட்டது. இப்பொழுது நமது அரசு பொறுப்பேற்ற பிறகு 216 ச.அடி பரப்பளவில் மக்கள் வாழ்வது சிரமம் என்று கருதி நமது தமிழ்நாடு முதல்-அமைச்சர் குறைந்தது 400 ச.அடி பரப்பளவில் குடியிருப்புகள் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில் இன்றைய தினம் கட்டப்பட்டு வரும் அனைத்து குடியிருப்புகளும் 400 ச.அடி பரப்பளவிற்கு குறையாமல் கட்டப்பட்டு வருகின்றன.
மறுகட்டுமான திட்டத்தின் கீழ் இங்கு இருந்த 1476 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு 1,800 குடியிருப்புகள் தூண் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டு வருகின்றது. இத்திட்டப்பகுதியில் 90 % (சதவீத) பணிகள் முடிவுற்றுள்ளன. மீதமுள்ள 10 % (சதவீத) பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வருகின்ற 2026 பிப்ரவரி மாதம் 20- ம் தேதிக்குள் நமது தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கரங்களால் திறந்து வைக்கப்பட்டு இங்கு இருந்த அனைத்து குடும்பங்களுக்கும் மீண்டும் குடியிருப்பு வழங்கப்படும். ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் பயனாளிகளின் பங்கு தொகையை ரூ.1.50 லட்சமாக குறைத்ததோடு மட்டுமல்லாமல் மாதத் தவணையில் செலுத்த உத்தரவிட்டுள்ளார்.
மேலும் முதல்-அமைச்சர் இன்னும் 5 நாட்களில் சென்னையில் 5 திட்டப்பகுதிகள், மற்ற மாவட்டங்களில் 11 திட்டப்பகுதிகள் மொத்தம் 16 திட்டப்பகுதிகளில் ரூ.1,238 கோடி மதிப்பீட்டில் 9,696 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைக்க உள்ளார். வாரியத்தால் சென்னையில் 1,36,946 குடியிருப்புகளும், மாவட்டங்களில் 96,836 குடியிருப்புகளும் மொத்தம் 489 திட்டப்பகுதிகளில் 2,33,782 குடியிருப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த கால ஆட்சியில் 27,628 குடியிருப்புகள் மட்டுமே கட்டப்பட்டது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் இன்று வரை 55,039 குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. கடந்த கால ஆட்சியில் 6,417 குடியிருப்புகள் மட்டுமே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த 5 வருடத்தில் 60,493 குடியிருப்புகள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது’ என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தற்காலிக ஊழியர்களின் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ‘அரசு ஊழியங்களின் போராட்டங்களில் தற்காலிக ஊழியர்கள் பணி என்பது வருடத்திற்கு 11 மாதம் என்பது மட்டுமே. அது மீண்டும் தொடரும்போது இடையில் ஒரு நாள் விடுமுறை வழங்கி விட்டு மீண்டும் Renewel செய்யப்பட்டு பணிபுரிவார்கள்.
இவர்கள் பணியில் சேரும் போது Communual Roatation போன்ற பணிகள் எதுவும் இருக்காது. இதுபோன்று பணியில் இருப்பவர்களை எந்த அரசும் பணி நிரந்தரம் செய்ய முடியாது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநில அரசும் பணிநிரந்தரம் செய்ய முடியாது.
பணிநிரந்தரம் செய்தால் நீதிமன்றம் தலையிடும். Communual rotation இல்லாமல் எந்த பணியாளரையும் பணிநிரந்தரம் செய்யக் கூடாது என்று நீதிமன்றம் கூறும். இந்த நிலையில் இதனை தெரிந்து கொண்டே போராட்டம் செய்வது என்பது ஒரு சிலர் தூண்டிவிட்டு நடத்துவது. அரசு ஊழியர் போராட்டம் அல்ல, இன்னொன்று ஊழியர் சங்கங்கள் அல்ல, தனிபநரின் தூண்டுதல் இருக்கிறது என்று ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன்.
பெங்களுரைச் சேர்ந்த ஒருவர் இங்கு இருக்கும் VHN போராட்டத்தை தூண்டிவிட்டார். நாங்கள் அவர் மீது புகார் கொடுத்து இருக்கிறோம். இதுபோன்ற தூண்டுதல்களை மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது. ஊழியர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது. போராட்டங்கள் என்பது இயல்பாக நடக்க வேண்டும். தேர்தல் நடக்கும் சூழ்நிலையில் அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் நிலையில் இதுபோன்று தூண்டிவிடப்படும் போராட்டங்கள் குறைக்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கத்தில் சொல்லியிருந்தேனே தவிர போராட்டங்களை கொச்சைப்படுத்துவது என்பது தி.மு.க. அரசாங்கத்தின் நோக்கம் அல்ல.
நான் இப்போது அரசியல்வாதியாக இருக்கலாம், இதற்கு முன்பு ஒரு யூனியன் தலைவராக இருந்து அரசியலுக்கு வந்திருக்கிறேன். 1980-களிலே நான் ஏற்கெனவே சட்டமன்றத்தில் பதிவு செய்திருந்தேன். எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது அவரது அரசை எதிர்த்து தலைமைச் செயலகத்திலேயே போராட்டம் நடத்தி எம்.ஜி.ஆரையே கீழே வரவழைத்து 500 பெண் தொழிலாளர்கள் முன் பேச வைத்து அவருக்கு நேராக விவாதம் செய்தவன் நான். அதனால் தொழிற்சங்கத்தைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும்’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து மத்திய இணை மந்திரியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அவர், ‘National Crime records Bureau (NCB) என்பது எந்தெந்த குற்றங்களுக்கு எத்தனை சதவிகிதம் அதாவது கொலைக் குற்றங்களாக இருந்தாலும், பாலியல் குற்றங்களாக இருந்தாலும் எந்தெந்த குற்றங்களுக்கு எந்த மாதிரியான சதவிகிதம் என்று பட்டியல் போட்டு மரியாதைக்குரிய சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சட்டமன்றத்தில் அண்மையில் தெரிவித்தார்.
இந்தியா முழுமைக்கும் இருக்கின்ற 36 மாநிலங்களில் மிகக் குறைந்த அளவிலான குற்றச்செயல்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான் என்பது ஆதாரத்துடன் தெரிவித்திருக்கிறார். அதற்கெல்லாம் மறுப்பு தெரிவிப்பதற்கு அவர்களுக்கு தெரியாது. யாராக இருந்தாலும் பொது வெளியில் விவாதம் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.
எந்தக் குற்றச் செயல்களாக இருந்தாலும் தமிழ்நாட்டிற்கும் மற்ற மாநிலங்களுக்கும் இடையே இருக்கின்ற வித்தியாசம், மிகக் குறைந்த அளவிலான குற்றச் செயல்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் தேர்தலுக்காக சொல்வது என்பது மக்கள் மத்தியில் எதுவும் எடுபடாது’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி. சிங் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.