காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் கீர்த்தனா, வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் எஸ்.பி.கே. தென்னரசு ஆகியோர் பார்வையிட்டு நேரில் ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் கீர்த்தனா, வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் எஸ்.பி.கே. தென்னரசு ஆகியோர் இன்று (02.06.2026) காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் அங்கமான ஹூண்டாய் மோபிஸ் நிறுவனத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாக நிகழ்ந்த தீ விபத்து சம்பவத்தினை பற்றி ஹூண்டாய் நிறுவனம் மற்றும் ஹூண்டாய் மோபிஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு கூட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக 31.05.2026 அன்று ஹூண்டாய் மோபிஸ் நிறுவனத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்டதீ விபத்தின் செய்தியினை அறிந்த முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டதின்படி, உடனடியாக சம்மந்தப்பட்ட அரசு துறைகளான தீயணைப்புத்துறை, காவல்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து முழு கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் இந்த விபத்தில் பணியாளர்கள் யாருக்கும் எவ்வித காயமும், உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும், அருகாமையிலுள்ள நிறுவனங்களுக்கும் தீ பரவாமல் முழு கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதற்கு, ஹூண்டாய் மோபிஸ் நிறுவன பிரதிநிதிகள் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்கள்.
இவ்வாய்வு கூட்டத்திற்கு பின்பு தீ விபத்து நிகழ்ந்த ஹூண்டாய் மோபிஸ் நிறுவனத்தின் வளாகத்தினை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் கீர்த்தனா, வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் எஸ்.பி.கே. தென்னரசு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.