சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இன்றைய தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியின்போது தன்னுடைய "Thug Life Moment" வீடியோ ஒன்றை எடுத்து, தனது நெருக்கமான நண்பர்கள் மட்டும் பார்க்கும்படி அவரது INSTA பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளியான அமைச்சரின் இந்த "Thug Life Moment" வீடியோவும், அதனைத் தொடர்ந்து அமைச்சர் "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தனது உடல்நலக் குறைவான கைக் குழந்தையோடு IPL போட்டியில் பங்கேற்றதாகவும், குழந்தைக்கு தனது செல்போன் மீது வெள்ளை நிற மாத்திரையை வைத்து, ATM கார்டு மூலம் crush செய்து, பறக்காமல் இருக்க 500 ரூபாய் நோட்டை வைத்து மறைத்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உடல்நிலை சரியில்லாத குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக ஐ.பி.எல் போட்டிக்கு அழைத்துச் சென்றதோடு, அக்குழந்தைக்கு மருந்து தயாரிப்பதையே Thug life Moment ஆக பெருமை கொண்டிருக்கும் அமைச்சரின் வீடியோ பதிவில் அவரின் மனைவியையும், உடல்நலக் குறைவு ஏற்பட்ட குழந்தையையும் எங்கே என்று மக்கள் சமூக வலைதளங்களில் எழுப்பும் கேள்விகளையும் அவ்வளவு எளிதாக புறந்தள்ள முடியாது. அதே நேரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பதால் இதனை விசாரிக்காமல் கடந்த கால ஆட்சியின் மீது பழி போட்டு கடந்து செல்வாரா தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புக்காக மூன்று கிலோமீட்டர் வரை ஓடி, தனது சக அமைச்சரை அவைப் புலவராக மாற்றிப் புகழ் பாட வைப்பதும், மற்றொரு அமைச்சருக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறைக்க குழந்தைகளைப் பயன்படுத்தி INSTA REELS-களை வெளியிடுவதன் மூலமாக மட்டும் போதைப்பொருள்களின் புழக்கத்தையும் பயன்பாட்டையும் மறைக்கவோ தடுக்கவோ முடியாது. போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்திட பாகுபாடற்ற நடவடிக்கையே அவசியம் என்பதை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உணர்ந்து செயல்பட வேண்டும்.
எனவே, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகளை மேற்கொள்ளும் TNPSC உள்ளிட்ட மனிதவள மேம்பாட்டுத் துறையை வைத்திருக்கும் அமைச்சர் மீது எழுப்பப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை முதல்-அமைச்சர் நேரடியாகத் தலையிட்டு முழுமையான விசாரணையை மேற்கொண்டு, அவர் பயன்படுத்தியது போதைப்பொருள்தான் என்பது உறுதியாகும் பட்சத்தில் அமைச்சர் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கையே போதைப்பொருள் ஒழிப்புக்கான ஆரம்பப் புள்ளியாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.