சென்னை,
தமிழகத்திற்கு முற்றிலும் புதிதான த.வெ.க. அரசு பொறுப்பேற்றுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் அமைச்சரவை முழுமை அடைந்தது. முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில், மூத்த அமைச்சர் செங்கோட்டையன் மட்டுமே முன்பு அமைச்சர் பதவியில் இருந்து அனுபவம் பெற்றவராக உள்ளார். மற்றபடி, முதல்-அமைச்சர் உள்பட 34 அமைச்சர்களும் அரசு துறைகளுக்கு மிகப் புதியவர்களே.
ஒரு துறையைப் பற்றி வெளியே இருந்து அறிந்து கொள்ளும் தகவல்கள் வேறு. ஆனால் அந்தத் துறையின் அமைச்சராக இருந்து அந்த துறை பற்றிய அறிவை பெற்றுக் கொள்வது என்பது வேறு. அந்த வகையில் ஒவ்வொரு புதிய அமைச்சரும் தனக்கான துறை பற்றிய அறிவு தேடல்களில் இறங்கியுள்ளனர் என்று தலைமைச் செயலக வட்டாரம் தெரிவிக்கிறது.
இதற்காக அந்தத் துறைகளின் மூத்த அதிகாரிகளை அழைத்து பேசுகின்றனர். ஆய்வுக் கூட்டங் களை நடத்தி திட்டம் பற்றி கேட்கின்றனர். அதோடு ஒவ்வொரு துறைகளுக்குமான கொள்கை விளக்க குறிப்புகளை வரவழைத்து விழுந்து விழுந்து படித்துப் பார்க்கின்றனர். ஏனென்றால் இன்னும் ஒரு மாதத்திற்குள் சட்டசபை கூட இருக்கிறது. அப்போது எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு தயங்காமல் பதிலளிக்க வேண்டியது உள்ளது.
இதுபற்றி அரசுத்துறை அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது. இது சற்று புதுமையாகத்தான் உள்ளது. துறைகளைப் பற்றிய முழு அறிவை அமைச்சர்கள் பெற்றிருப்பது அவசியம். அதற்கான தேடல்களில் அமைச்சர்களும் முழு மூச்சாக இறங்கியுள்ளனர். அவர்கள் ஆர்வத்துடன் ஒவ்வொரு திட்டங்களை பற்றி கேட்கின்றனர். எனவே விரைவில் அவர்கள் அந்த துறையின் முழு அறிவையும் பெற்றுவிடுவார்கள் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தனர்.