தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி இரவு தெருக்கூத்து நடைபெற்றது. இதை பார்ப்பதற்காக 17 வயது சிறுமி தனது பெரியம்மா உடன் சென்றார். தெருக்கூத்து நடந்து கொண்டிருந்தபோது அந்த சிறுமி வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற 3 பேர் அந்த சிறுமியை விவசாய நிலத்திற்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் அந்த சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவருடைய பெரியம்மா கேட்டபோது நடந்த சம்பவம் பற்றி சிறுமி கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர் இதுகுறித்து தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் போக்சோ வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த தெருக்கூத்து கலைஞர்கள் கொல்லாபுரி (வயது 65), மணிகண்டன்(55), மஞ்சுநாதன்(33) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி போக்சோ கோர்ட்டில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் 3 பேர் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதனால் கொல்லாபுரி, மணிகண்டன், மஞ்சுநாதன் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி அசின்பானு தீர்ப்பளித்தார்.