சென்னை,
எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை என்பது வெறும் திட்டங்களின் பட்டியல் அல்லது நிதி ஒதுக்கீட்டு அறிக்கை மட்டுமல்ல. அது ஒரு மாநில அரசின் சமூகநீதிப் பார்வையையும், சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் கொள்கை முடிவுகளையும் வெளிப்படுத்தும் முக்கியமான ஆவணமாகும். சிறுபான்மை சமூக மக்களுக்கான சிறப்பு அறிவிப்புகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பைச் செல்லும் இடமெல்லாம் ஏற்படுத்தி வந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரின் பேச்சுக்கும், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதை மானியக் கோரிக்கை அறிவிப்புகள் காட்டுகிறது. அந்த வகையில், தற்போதைய சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை, பெரிய அளவிலான சிறுபான்மை சமூகத்தின் முன்னேற்றத்துக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் எதுவுமின்றி, சமூகத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாமல் உப்புச் சப்பில்லாமல் அமைந்திருப்பது பெரும் ஏமாற்றமளிக்கிறது.
நடப்பு மானியக் கோரிக்கையில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை விரிவாக்கம், சிறுபான்மையின மாணவிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட உயர்கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் அறிவிப்பு, வழிபாட்டுத் தலங்களின் சொத்துகளைப் பாதுகாக்க, கட்டிடங்களைக் கட்ட வட்டியில்லா சுழல் நிதிக்கடன் மற்றும் வக்ஃப் வாரிய நிர்வாக மானிய உயர்வு ஆகியவை வரவேற்கத்தக்க முடிவுகளாகும்.
இருப்பினும், சென்னை மாநகரில் ஏற்கனவே காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி இயங்கி வரும் நிலையில், வக்ஃப் வாரியத்தின் கீழ் மீண்டும் ஒரு மகளிர் கல்லூரியைச் சென்னையிலேயே தொடங்குவது அவசியமற்ற ஒன்றாகும். இத்திட்டத்தை உடனடியாக மாற்றி, சிறுபான்மையின மாணவிகள் அதிகம் வசிக்கும் பிற மாவட்டங்களுக்கு அக்கல்லூரியைக் கொண்டு செல்ல வேண்டும். மேலும், இதில் இடம்பெற்றுள்ள திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் கல்வி உதவிகளும் பெரும்பாலானவை ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களின் மறுவடிவமாகவே உள்ளனவே தவிர, புதிய தொலைநோக்குத் திட்டங்கள் எதுவுமில்லை.
வக்ஃப் வாரியத்தின் பணிகளை விரைவுபடுத்தவும், சொத்துக்களை முறையாகப் பராமரிக்கவும் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்படாதது மிகப்பெரிய ஏமாற்றமாகும். அதேபோல், சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் நேரடியாக உயர்த்தக்கூடிய தொழில்முனைவோர் கடன்கள் அல்லது நிதியுதவி சார்ந்த எந்தவொரு வலுவான திட்டமும் இதில் இடம்பெறவில்லை. குறிப்பாக, ‘தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்’ மூலமாகச் சிறுபான்மையின மக்கள் சுயதொழில் தொடங்கக் கடன் வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் இதில் இல்லை.
இவற்றுடன், முஸ்லிம் சமூகத்தின் பல்லாண்டு கால முக்கியக் கோரிக்கைகளும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட வாழ்நிலைகள் குறித்து துல்லியமாக அறிந்துகொள்ள, சச்சார் கமிட்டியைப் போன்றதொரு சுதந்திரமான உயர்நிலைக் கமிட்டியைத் தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு உயர்வு, சிறுபான்மையினர் நலத்துறைக்கெனத் தனி அமைச்சகம் உருவாக்குதல், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் கோரிக்கை, சிறைவாசிகள் விடுதலை மற்றும் தமிழக அரசுப் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு முஸ்லிம் தலைவர்கள் அல்லது சான்றோர்களின் பெயரைச் சூட்டுதல் போன்ற நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கும் இந்த மானியக் கோரிக்கையில் எந்தப் பதிலுமில்லை.
எனவே, அமைச்சரின் வெறும் பேச்சுகளையும் பெயரளவில் மட்டுமே உள்ள இந்த அறிவிப்புகளையும் தாண்டி, சிறுபான்மை சமூகத்தின் உண்மையான பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்குத் தேவையான கூடுதல் திட்டங்களைச் சேர்த்து, அவர்களின் பல்லாண்டு கால நியாயமான கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.