சென்னை,
பெண்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிதியில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் பெண்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிதியில் கடந்த 2023-2026-ம் காலகட்டங்களில் சுமார் 107.94 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக மயிலாடுதுறை, திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பது தணிக்கையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திட்டங்களைச் செயல்படுத்தாமேலேயே போலி பில்களைத் தயாரிப்பது, வங்கிக் கணக்குகளை முறைகேடாகப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை மேற்கொண்டது உள்ளிட்ட மோசடிகளால் அரசு நிதியானது தவறகான முறையில் கையாளப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் பாதி மாவட்டங்களில் மட்டுமே முடிவடைந்துள்ள தணிக்கை பணியிலேயே இத்தனை கோடி முறைகேடுகள் என்றால் தமிழகம் முழுவதும் இன்னும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டால் இன்னும் பல கோடி அரசு பணம் ஊழல் செய்யப்பட்டிருப்பதற்கான பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்.
கடந்த கால திமுக ஆட்சி எந்த அளவிற்கு ஊழல் குற்றச்சாட்டு நிறைந்த ஓர் ஆட்சியாக செயல்பட்டிருக்கிறது என்பதற்கு துறை ரீதியாக தொடர்ந்து வெளிவரும் பல ஊழல் புகார்களே சாட்சி.
ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என்று பதவியேற்றிருக்கும் தவெக அரசு மாநிலத்தின் அனைத்து துறைகளிலும் முழுமையான தணிக்கைளை விரைந்து நடத்தி மக்கள் வரிப்பணத்தில் ஊழல் செய்த யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.