சென்னை,
சிறுமி மாயமானது தொடர்பான விசாரணையில் தமிழகக் காவல்துறை திணறி வரும் நிலையில், இவ்விசாரணைகளை சிபிசிஐடி அல்லது சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டு நடுப்பட்டு பகுதியில் கடந்த 11-ம் தேதி மாயமான 7 வயது சிறுமியைக் காவல்துறையினரால் பத்து நாட்கள் கடந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது.
சிறுமி மாயமானது தொடர்பாகப் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் 10 தனிப்படைகள் அமைத்து, பல்வேறு கோணங்களில் தேடியும் சிறிய அளவிலான துப்புகூடக் கிடைக்காமல் காவல்துறையினர் திணறிக்கொண்டிருப்பது, காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்குகிறது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, சட்டம் ஒழுங்கைப் பேணிக்காக்க வேண்டிய காவல்துறையை, அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் ஏவல்துறையாகப் பயன்படுத்தி, எதிர்க்கட்சியினர் மீதும் அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்கள் மீதும் தேவையற்ற வழக்குகளைப் பதிவு செய்து சிறையில் அடைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தி வரும் தவெக அரசால், தமிழகக் காவல்துறை படிப்படியாகச் செயலிழந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுமட்டுமல்லாது, விழுப்புரம் அருகே 7 வயது சிறுமியைக் கடத்த முயன்ற வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம், ஸ்ரீபெரும்புதூர் அருகே 8 வயது சிறுமி மாயமாகிப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் எனத் தமிழகத்தில் சிறுமிகள் தொடர்பான கடத்தல் மற்றும் மாயமாகும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் நிலையில், இவற்றின் பின்னணியில் ஏதேனும் கும்பல்கள் செயல்படுகின்றனவா? என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை நடத்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.
எனவே, சிறுமி மாயமானது தொடர்பான விசாரணையில் தமிழகக் காவல்துறை திணறி வருவதாலும், அடுத்தடுத்த சிறுமிகள் கடத்தல் தொடர்பான புகார்கள் எழுந்துள்ள நிலையிலும், இவ்விசாரணைகளை சிபிசிஐடி (CBCID) அல்லது சிபிஐ (CBI) வசம் ஒப்படைக்க வேண்டும் எனத் தவெக அரசையும், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.