கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

செஞ்சி சிறுமி வழக்கில் நீடிக்கும் மர்மம்: பள்ளி ஆசிரியர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

பல்வேறு கோணங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்,

செஞ்சி சிறுமி வழக்கில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. சிறுமி படித்த பள்ளி ஆசிரியர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

சிறுமி மாயம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு-பவானி தம்பதியினரின் 7 வயது மகள் ஹேமலதா என்ற ஹேமாவதி. இவள், கடந்த 11-ந்தேதி மாலையில் தனது பிறந்தநாளை கொண்டாடி முடித்து விட்டு பெற்றோருடன் படுத்து தூங்கினாள். மறுநாள் அதிகாலையில் அவளை திடீரென காணவில்லை.

சிறுமியை கண்டுபிடிக்க மாவட்ட காவல்துறை சார்பில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

5 தனிப்படை

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டுகள் வேல்முருகன், கீதா ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 6 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதனைத்தொடர்ந்து அவர்கள் 7-வது நாளான நேற்று 2-ம் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார், 4 குழுக்களாக பிரிந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வேல்முருகன், கீதா ஆகியோர் தலைமையிலான போலீசார், நேரடியாக சிறுமி படித்த ஆலம்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்று அங்கு பராமரிக்கப்பட்டு வரும் மாணவ-மாணவிகளின் வருகைப்பதிவேட்டை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

ஆசிரியர்களிடம் விசாரணை

பின்னர் சிறுமி மாயமான சம்பவம் குறித்து ஆசிரியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமியின் பள்ளி நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர். அதுபோல் மற்றொரு குழுவினர், சிறுமியின் சகோதரி படித்து வரும் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர். சிறுமி மாயமான சம்பவம் குறித்து அவளது சகோதரியின் சக தோழிகளிடம் கேட்டறிந்து விசாரணை நடத்தினர். இதுதவிர கண்காணிப்பு கேமரா பதிவுகள், சி.டி.ஆர். பதிவுகளை ஒரு குழுவினரும், மற்றொரு குழுவினர் செல்போன் டவர் தரவுகளையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்மம் நீடிப்பு

இவ்வழக்கு நாளுக்கு நாள் பெரும் மர்ம கதையாக நீடித்துக்கொண்டிருக்கிறது. சிறுமி காணாமல் போனதாக கூறப்படும் 11-ந்தேதி இரவு அவள் தனியாக வேறு அறையில் தூங்கவில்லை. பெற்றோர் வடிவேலு, பவானி மற்றும் சிறுமியின் பாட்டி ஆகிய 3 பேருடன் ஒரே அறையில்தான் படுத்து தூங்கியுள்ளாள். நள்ளிரவில் சிறுமி மட்டும் எப்படி தனியாக எழுந்து வெளியே சென்றாள்? யாருக்கும் எந்தவித சத்தமும் கேட்கவில்லையா? அல்லது யாராவது கதவை திறந்து உள்ளே வந்து சிறுமியை கடத்திச் சென்றனரா? என்ற பல்வேறு கோணங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT