தமிழக செய்திகள்

திருச்செந்தூரில் காணாமல் போன சிறுமி: 1 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்

திருச்செந்தூர் அருகே காயாமொழி பகுதியில் காணாமல் போன சிறுமியை மீட்ட போலீசார் நடத்திய விசாரணையில், "தன்னை 4 பேர் தூக்கிச் சென்றதாக" அந்த சிறுமி கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி, அம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது 7 வயது மகள், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு 7 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென சிறுமி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் டி.எஸ்.பி. மகேஷ்குமார் தலைமையில், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மதுரைவீரன், ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திலீபன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்திருந்த நிலையிலும், போலீசார் தனிப்படைகளாகப் பிரிந்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத் தேடுதலுக்குப் பின், சிறுமியின் வீட்டின் பின்புறம் இடிந்த நிலையில் இருந்த ஒரு பழைய வீட்டின் கதவு மறைவில் அச்சத்துடன் இருந்த சிறுமியை போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது, "தன்னை நான்கு பேர் தூக்கிச் சென்றதாக" அவர் கூறினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.

எனினும் அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் நடமாடினார்களா என போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில், இருள் மற்றும் தனிமை காரணமாக ஏற்பட்ட பயத்தில் சிறுமி அவ்வாறு கூறியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு மணி நேரத்திற்குள் சிறுமியை மீட்ட போலீசாரின் துரித நடவடிக்கையைப் பொதுமக்கள் பாராட்டினர்.