தமிழக செய்திகள்

கோவில்பட்டியில் மாயமான நபர் சுடுகாட்டில் சடலமாக மீட்பு: போலீஸ் விசாரணை

கோவில்பட்டி, அத்தை கொண்டான் சுடுகாட்டுப் பகுதியில் ஒரு நபர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திராநகர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டியராஜன் மகன் ராஜேந்திரன் (வயது 55). இவர் கடந்த மே 1-ம் தேதி முதல் திடீரென காணாமல் போனார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, போலீசார் வழக்கப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று அத்தை கொண்டான் சுடுகாட்டுப் பகுதியில் ராஜேந்திரன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதியினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி மேற்கு போலீசார், ராஜேந்திரனின் உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்ததற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.