சென்னை,
பாலியல் குற்றங்களும் அதிகரித்து வரும் சூழலில், இத்தகைய குற்றங்களை தடுக்க அமைக்கப்பட்டதாக கூறப்படும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எந்த மூலையில் முடங்கி கிடக்கிறது? என்று டி.டி.வி. தினகரன் கேள்வி ஏழுப்பியுள்ளார். இது தொடர்பாக, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தருமபுரி அருகே கஞ்சா போதையில் பெற்ற தாயையே அடித்து கொலை செய்த மகன் – போதையில்லா தமிழகத்தை உருவாக்கப்போவதாக கூறிய 'தூய சக்தி', தமிழகத்தை "போதையில் புதையும்" சக்தியாக மாற்றி வருவதுதான் மிச்சம்!
தருமபுரியில் செலவுக்கு பணம் தர மறுத்ததால், கஞ்சா போதையில் பெற்ற தாயையே அடித்து கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை மட்டுமல்லாமல், சமூகத்தின் அமைதியையும் சட்டம் ஒழுங்கையும் அடியோடு சீர்குலைத்து வருவதோடு போதை பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள் பணத்திற்காக கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, தாக்குதல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுவதும், பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் ரகளையில் ஈடுபடுவதும் வாடிக்கையாகிவருகிறது.
பெற்ற தாயின் உயிரையே பறிக்கும் அளவிற்கு போதை வெறி தலைக்கேறியிருப்பது, தமிழகத்தில் போதைப் பொருள் ஒழிப்பிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் அரசு எந்த அளவிற்கு தோல்வியடைந்திருக்கிறது என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
தமிழகத்தின் தலைநகரம் தொடங்கி கடைக்கோடி கிராமங்கள் வரை ஆழமாக வேரூன்றியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த, மாவட்டந்தோறும் போதை பொருள் தடுப்பு படை அமைப்பதற்குத் தனது முதல் மூன்று கையெழுத்துகளில் ஒன்றாக கையெழுத்திட்டதாக பெருமை பேசிக்கொண்ட தூய சக்தி, இன்று கஞ்சா போதையால் நிகழ்ந்திருக்கும் இந்த படுகொலைக்கு என்ன பதில் சொல்ல போகிறது ?
நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்களும், அவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்து வரும் சூழலில், இத்தகைய குற்றங்களைத் தடுக்க அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எந்த மூலையில் முடங்கி கிடக்கிறது?
மாவட்டந்தோறும் போதை பொருள் தடுப்பு படை அமைத்ததாக கூறிய தூயசக்தி, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் மொத்த விற்பனையாளர்களையும், கடத்தல் பின்னணியில் செயல்படுவோரையும் தனது கட்சியிலேயே வைத்துக்கொண்டு, ஒருபுறம் போதை ஒழிப்பு குறித்து மேடைகளில் பேசுவதும், மறுபுறம் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் போதை பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறுவதும்தான் அவ்வப்போது பெருமையாக கூறிக்கொள்ளும் 'வெள்ளாவியில் வைத்துத் துவைக்கப்பட்ட தூய சக்தியின்' உண்மையான செயல்பாடா?
ஆட்சி பொறுப்பேற்று 5 மாதங்களை கடந்த பின்னரும், போதை பொருள் கடத்தலில் ஈடுபடுவோரையும், அவர்களுக்கு பின்னணியில் இருந்து செயல்படும் முக்கிய புள்ளிகளையும் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்காமல், அத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கே கட்சியில் பொறுப்புகளை வழங்கி அழகுபார்ப்பதன் விளைவாகவே போதை பொருட்களின் புழக்கமும், அதனால் ஏற்படும் குற்ற சம்பவங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கு முதல்-அமைச்சர் என்ன பதில் சொல்ல போகிறார்?
போதைப்பொருள் புழக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்தி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையை, அரசின் தவறான செயல்பாடுகளையும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பதையும் சுட்டிக்காட்டி, அதன் போலி முகத்திரையை ஜனநாயக ரீதியில் கிழித்தெறிந்து வருபவர்களை கண்காணிக்கவும், அவர்களை அச்சுறுத்தவும் ஏவல்துறையாக பயன்படுத்தி வரும் தூய சக்தி, தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு, காவல்துறையை எவ்வித அரசியல் தலையீடுமின்றி போதைப்பொருள் ஒழிப்பு பணியில் சுதந்திரமாக செயல்பட அனுமதித்திருந்தால், கடந்த ஐந்து மாதங்களில் தமிழகத்தில் இத்தனை குற்றச் சம்பவங்கள் அரங்கேறியிருக்க வாய்ப்பில்லை!
எனவே, பல கோடி ரூபாய் செலவு செய்து ரீல்ஸ் கண்டெண்டுகளுக்காக மாரத்தான் ஓடுவதால் மட்டும் போதை பொருட்களை ஒழித்துவிட முடியாது என்பதை உணர்ந்து, நாட்டின் எதிர்கால தூண்களான இளைஞர்களின் வாழ்க்கையை படுகுழியில் தள்ளிக்கொண்டிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் தாராள புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தி ஒழிப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.