தமிழக செய்திகள்

பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சென்னை,

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. பிளஸ்-2 பொதுத்தேர்வில் 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதன்படி மாணவர்கள் 93.19 சதவீதமும், மாணவிகள் 97 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம்பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதிக மாணவர்கள் சதம் அடித்த பாடங்களில் கணினி அறிவியல் முதலிடத்தில் உள்ளது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in இணையதளங்களில் சென்று பார்க்கலாம். மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் அறிந்து கொள்ளலாம். இதுதவிர பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

“ பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் வாழ்த்துகள். 95.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை தொடர்புகொண்டு, சென்ற ஆண்டைவிட அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமிதத்தோடு கூறியபோது, பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

மாணவச் செல்வங்கள், வாழ்வில் மேன்மையடைய மேற்படிப்புகளில் மேலும் கவனம் செலுத்திப் படியுங்கள். இத்தேர்வில் இம்முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம்; உங்களுக்கான அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள். கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை” என்று தெரிவித்துள்ளார்.