தமிழக செய்திகள்

பெற்ற மகனையே முறையாக வளர்க்காத மு.க.ஸ்டாலின்: அமைச்சர் ரமேஷ் சாடல்

ஆபாசமும், அவதூறும் தான் திமுகவின் டி.என்.ஏ. என்று அமைச்சர் ரமேஷ் கூறினார்.

திருச்சி,

திருச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அரசியல், கருத்தியல் ரீதியான கேள்விகளுக்கு பதில் சொல்லலாம். வீட்டில் அமர்ந்துகொண்டு வாய்க்கு வந்தவற்றையெல்லாம் பேசலாம் என நினைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் இதெல்லாம் ஒரு அரசியல் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் கிடையாது.

முதல்-அமைச்சர் விஜய் மிகத் தெளிவாக ஆட்சி நிர்வாகம் நடத்தி வருகிறார். அனைவரும் பாராட்டக் கூடிய வகையில் ஆட்சி நிர்வாகம் நடத்தி வருகிறார். உலகளவில் விளையாட்டுத் துறையில் தமிழர்கள் சாதிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் விரும்புகிறார். மற்றவர்கள் விமர்சனத்துக்காக எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். அதனால்தான் எதிர்க்கட்சியாகக்கூட அமர முடியாத நிலைமையில் (அதிமுகவினர்) உள்ளனர்.

ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவது என்பது ஜனநாயக உரிமை. இதனை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அவதூறாகவும் ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும்தான் பேசுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். தி.மு.க.வினர் ஆபாசமாகப் பேசவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும். திமுகவின் டி.என்.ஏ.-வே அதுதான். ஆபாசமாகவும், அவதூறாகவும், கீழ்த்தரமாகவும் பேசுவதுதான் திமுகவின் டி.என்.ஏ. இப்படித்தான் திமுக முன்னாள் அமைச்சர்கள் எல்லோரும் வளர்ந்துள்ளனர்.

பெற்ற மகனையே முறையாக வளர்க்காத முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. (மு.க. ஸ்டாலின்), கட்சியை ஒழுங்காக வைத்திருப்பார் என எதிர்பார்க்க முடியாது. மின்வெட்டு பிரச்சினை சரிசெய்யப்பட்டுவிட்டதாக மின்துறை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் எங்கும் மின்வெட்டு இல்லை; மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். மின்வெட்டு இருப்பதாக அரசியல் செய்வதற்காக சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். அரசியல் ஆதாயத்திற்காக சிலர் குற்றம்சாட்டுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். இவ்வாறுய் அவர் கூறினார்.

SCROLL FOR NEXT