தமிழக செய்திகள்

மு.க. ஸ்டாலினே உருவக்கேலி செய்து பேசுவதா? அமைச்சர் வன்னி அரசு காட்டம்

ஆணாதிக்கம் மிகுந்த சமூக கட்டமைப்பில் பெண்கள் பொது வாழ்க்கைக்கு வருவதே அரிது என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

தாராபுரம் இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் சுகன்யாவை ஆதரித்து மு.க. ஸ்டாலின், நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பிரச்சாரத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், “இந்தத் தொகுதி தவெக வேட்பாளரை பெட்டி பாமா, பல்டி பாமா என சத்தியத்திற்கு விரோதமாக செயல்பட்ட அந்த வேட்பாளரை மக்கள் அழைக்கின்றனர்” எனப் பேசினார். மேலும், தவெக வேட்பாளர் சத்யபாமாவின் உருவம் குறித்தும் பேசியிருந்தார்.

இதற்கு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வன்னி அரசு கூறியிருப்பதாவது: “உருவக்கேலி கூடாது என்று வழிகாட்டக்கூடிய தலைவரான மு.க. ஸ்டாலினே இப்படிப் பேசி இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ஆணாதிக்கம் மிகுந்த சமூக கட்டமைப்பில் பெண்கள் பொது வாழ்க்கைக்கு வருவதே அரிது. அதுவும் தலித் பெண்கள் வருவது அதனினும் அரிது. அதை முடக்கும் வகையில், ஆணாதிக்க சமூகம் தமது அதிகாரத்தைப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம்

அதனால் தான் பெண்களை பொது இடங்களில் கேலி செய்தால் ஓராண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என 1998 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்திற்கு ‘தமிழ்நாடு பெண்களுக்குத் துன்பம் விளைவித்தலை தடை செய்கிற சட்டம்’ எனப் பெயர் சூட்டப்பட்டது. இச்சட்டத்தை இயற்றியவர் யார் தெரியுமா? திமுக தலைவரும் திராவிட இயக்கத்தின் ஆளுமையுமான கலைஞர். தந்தையின் சட்டத்தை மதிக்காமல் மீறுவது சரியா?” என தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT