தமிழக செய்திகள்

ரூ.50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் உருவச்சிலை: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் உருவச்சிலை சென்னை கலைவாணர் அரங்க வளாகத்தில் ரூ.50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு, மாற்றி நிறுவப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் சென்னை, கலைவாணர் அரங்க வளாகத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு, மாற்றி நிறுவப்பட்டுள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் உருவச்சிலையை திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமை தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டி வளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்:

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 29.11.1908 அன்று சுடலைமுத்துப்பிள்ளை, இசக்கி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். நாகர்கோவில் சுடலைமுத்துப்பிள்ளை கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கிருஷ்ணன் என்பதாகும். தமிழ்த் திரையுலகின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர், பாடகர், நாடகத் தயாரிப்பாளர், சினிமா தயாரிப்பாளர் என்ற புகழுடன் விளங்கியவர். இவரை, “இந்தியாவின் சார்லி சாப்ளின்” என்றும் புகழ்வர். பேரறிஞர் அண்ணா அவர்களோடும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களோடும் நெருங்கிப் பழகியவர். தாம் ஈட்டிய செல்வத்தின் பெரும் பகுதியை உதவி என வருவோர்க்கு வாரி வாரி வழங்கிய வள்ளல் இவர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தம் வாழ்நாளில் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியாகச் சேலத்தில் பேரறிஞர் அண்ணாவின் உருவப் படத்தைத் திறந்து வைத்தார்.

அறிவியல் கருத்துகள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துகளைத் திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துகளை வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக்கணக்கானவர்களுக்குப் பணத்தை வாரி வழங்கியவர். காந்தியடிகளிடமும், காந்திய வழிகளிலும் பற்று மிகக் கொண்டவர். தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகருமான கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1957 ஆகஸ்ட் 30 அன்று தனது 49-வது வயதில் காலமானார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அந்நாளில் இருந்த பாலர் அரங்கத்தைப் புதுப்பித்து, ‘கலைவாணர் அரங்கம்’ என்று அதற்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டினார்.

ஜி.என்.செட்டி சாலையில் நிறுவப்பட்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் உருவச்சிலை:

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் உருவச்சிலை சென்னை, தியாகராயநகரில் வாணி மகாலுக்கு அருகில் நான்கு சாலைச் சந்திப்பில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டு ஊர்வலக் குழுவினரின் செலவில் அமைக்கப்பட்டது. அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சரான முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் முதலமைச்சரான பேரறிஞர் அண்ணாவால் 14.1.1969 அன்று திறந்து வைக்கப்பட்டது. மேலும், என்.எஸ்.கிருஷ்ணனின் உருவச் சிலை ஜி.என்.செட்டி சாலையில் கட்டப்பட்ட மேம்பாலம் பணிக்காக 26.2.2008 அன்று அகற்றப்பட்டது. பின்னர் மேம்பாலப் பணிகள் முடிவுற்று ஜி.என்.செட்டி தெரு, திருமலைப்பிள்ளை சாலை சந்திப்பின் அருகில் அமைக்கப்பட்டது.

கலைவாணர் அரங்க வளாகத்தில் புதுப்பிக்கப்பட்டு, மாற்றி நிறுவப்பட்டுள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் திருவுருவச் சிலை திறப்பு:

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் குடும்பத்தினர், அவரது உருவச்சிலையை அந்த இடத்திலிருந்து அகற்றி சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவ வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்கள்.

அந்த கோரிக்கையினை ஏற்று, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் உருவச்சிலை தற்போது இருக்கும் இடத்திலிருந்து பாதுகாப்பாக அகற்றி சென்னை, வாலாஜா சாலையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் 23.6.2025 அன்று அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் உருவச்சிலை சென்னை, கலைவாணர் அரங்க வளாகத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு, மாற்றி நிறுவப்பட்டு, தமிழ்நாடு முதல்-அமைச்சரால் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ்.முருகன், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப.ரங்கநாதன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் விஜயா தாயன்பன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா.வைத்திநாதன், என்.எஸ்.கிருஷ்ணனின் குடும்பத்தினர், நடிகை குமாரி சச்சு, நடிகர்கள் நாசர், கருணாஸ், சரவணன், போஸ் வெங்கட் உள்ளிட்ட திரைத்துறையை சார்ந்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.