தமிழக செய்திகள்

மு.க.ஸ்டாலின் ஒட்டுமொத்த நாட்டிற்காகவும் போராடும் தலைவர்; அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம்

தமிழக சட்டசபை தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, திமுக கூட்டணியை ஆதரித்து ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முன்னாள் முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து சென்னை எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது,

நான் டெல்லி முதல்-மந்திரியாக இருந்தபோது ஏழை குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க சிறப்பான பள்ளிக்கூடங்களை அமைத்தோம். அனைத்து பகுதிகளிலும் மருந்தகங்கள் (கிளினிக்) அமைத்தோம். நாங்கள் மேற்கொண்ட நலத்திட்டங்களை பார்வையிட மு.க.ஸ்டாலின் டெல்லி வந்தார்.

நலத்திட்டங்களை பார்வையிட ஒரு மாநில முதல்-மந்திரி மற்றொரு மாநிலத்திற்கு செல்லமாட்டார். ஆனால், அந்த முறையை மாற்றி மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு வந்தார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மு.க.ஸ்டாலினிடம் ஆணவம் இல்லை. அவர் மக்களுக்கான மனிதர். மக்களின் குடும்பங்களுக்கு பாடுபட மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் போராடும் தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் போல வேறு எந்த மாநிலத்திலும் ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் மகளிருக்கு மாதம் ரூ. 1 ஆயிரம் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டம் இல்லை. பள்ளிகளில் காலை உணவு திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கல்வி, மருத்துவம், பெண்கள், மாநில வளர்ச்சிக்கு முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். என்.டி.ஏ. என்பது டெல்லி கூட்டணி. அதிமுக - பாஜகவுக்கு வாக்களித்தால் அவர்கள் இந்த திட்டங்களை நிறுத்திவிடுவார்கள். மகளிர் உரிமைத்தொகையை அவர்கள் நிறுத்திவிடுவார்கள். மக்களிடம் கொள்ளையடிப்பதையே அதிமுக - பாஜக கொள்கையாக வைத்துள்ளது. தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சியடைய மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பானையுடன் வெற்றிபெறும்.

என்றார்.