சென்னை
தமிழக சட்டசபைக்கான தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. நாளை மறுநாள் மாலையுடன் தமிழகத்தில் பிரசாரம் முடிவடைகிறது. இதனால், தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் போட்டியிடுகின்றன.
இவை தவிர, நாம் தமிழர் மற்றும் த.வெ.க. ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தலை தனித்து எதிர்கொள்கின்றன. இதனால், தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. இதில், தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, கோவை, திருப்பூரில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். இதேபோன்று, இன்றும் நாளையும் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொள்கிறார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்கிறார்.
இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கெஜ்ரிவால் இன்று சந்தித்து பேசினார். அப்போது கல்வி, சுகாதாரம் மற்றும் மகளிருக்கு அதிகாரமளித்தல் ஆகிய துறைகளில் தி.மு.க. அரசின் பணிகளை பாராட்டி பேசினார். ஒருவருடைய அரசின் அணுகுமுறைகளில் இருந்து மற்றொருவர் தொடர்ந்து கற்று கொண்டோம் என கூறியதுடன், தமிழக மக்களிடையே தி.மு.வி.ன் கொள்கைகள் ஏற்படுத்திய பெரிய தாக்கங்களை பாராட்டினார்.
இதன்பின்னர், திரு.வி.க. நகர் தி.மு.க. வேட்பாளர் ரவிச்சந்திரனுக்கு ஆதரவு கேட்டு சென்னை புளியந்தோப்பு பகுதியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கெஜ்ரிவால் ஆகிய இருவரும் வேனில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது பிரசாரத்தில் பேசிய கெஜ்ரிவால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எனது சகோதரர். எனது நண்பர். தமிழகத்தில் பல திட்டங்களை கொண்டு வந்தவர். அவற்றை நிறைவேற்றியும் தந்தவர். டெல்லியில் எங்களுடைய பள்ளி, மருத்துவமனைகளை பார்வையிட்டு வந்து அவற்றை தமிழகத்தில் செயல்படுத்தியவர். எந்தவித ஈகோவும் இல்லாதவர்.
அதனால், அவருக்காக பிரசாரத்தில் ஈடுபட வந்துள்ளேன் என்று பேசினார். டெல்லியில் எங்களுடைய திட்டங்களை பா.ஜ.க. நிறுத்தி விட்டது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது அ.தி.மு.க.வின் குற்றம். பீகாரில் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட கதிதான் அ.தி.மு.க.வுக்கு ஏற்படும் என்றும் கூறினார்.
தமிழகத்தில் மு.க. ஸ்டாலினின் நலத்திட்டங்கள் தொடர வேண்டும். அதற்காக தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில், ஸ்டாலினின் எதிர்ப்பை இந்தியாவே பார்த்தது என்றும் பேசியுள்ளார். அவர் தமிழகத்திற்காக மட்டும் போராடவில்லை. இந்தியாவுக்காக போராடி வருகிறார். தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியவர் என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.