சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 11.3.2026 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக கால்நடை பராமரிப்புத் துறையில், கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 292 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகித்து வரும் கால்நடைகளை நன்கு பராமரிப்பதற்காகவும், மேம்பட்ட தரமான மருத்துவச் சிகிச்சைகளை கால்நடைகளுக்கு அளித்திடவும், பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தமிழ்நாடு அரசு சிறப்பான முறையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கால்நடை பராமரிப்புத் துறையில், கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட 292 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதன் அடையாளமாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் 7 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசால் இந்த ஐந்து ஆண்டு காலத்தில் கால்நடை பராமரிப்புத்துறையில் 3297 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் ந.சுப்பையன், கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் சா.ப.அம்ரித், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.