தமிழக செய்திகள்

அநாகரிகமாக பேசும் திமுகவினரை மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் - திருமாவளவன்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

மதுரை,

மதுரையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டி என்றாலும் தவெக ஆட்சி தொடர ஆதரவு நீடிக்கும். இடதுசாரிகள் எடுத்துள்ள முடிவு அவர்களின் அரசியல் உரிமை. இடதுசாரிகள் இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் தவெக கூட்டணிக்கு பாதிப்பு இல்லை. இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து விசிக பிரசாரம் செய்யும்.

போராட்டத்தின்போது நாகரிக வரம்புகளை மீறி திமுகவினர் சிலர் அநாகரிகமாக பேசியுள்ளனர். ஈன்ற தாயைப் பழிக்கும் இழிச்சொற்களால் அரசியல் எதிரிகளை விமர்சிப்பது அழகல்ல; அமைச்சர் நிர்மல்குமாரின் தாயை பழிக்கும் வகையில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசியதை விசிக கண்டிக்கிறது. பக்குவப்படுத்தப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் கொச்சையாக பேசுவது கவலை அளிக்கிறது.

திமுகவினரின் அநாகரிகமான பேச்சு தவெகவிற்கு எதிராக போகும் என்பதைவிட, திமுகவிற்கு எதிராக மக்களிடத்திலே கருத்து பதிவாகும் என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அநாகரிகமாக பேசும் திமுகவினரை வெளிப்படையாக, பொதுமக்கள் அறியக்கூடிய வகையில் மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT