கூட்டணி கட்சி தலைவர்கள் ஆதரித்து பிரசாரம் செய்யவில்லை என்றால் இடைத்தேர்தல் நடந்த 2 தொகுதிகளிலும் தி.மு.க. டெபாசிட் இழந்திருக்கும் என்று துரை வைகோ எம்.பி. அளித்த பேட்டியில் கூறினார். ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் திருப்திகரமாக நடந்து முடிந்தன என கூறினார். ஆனால் இப்போது தி.மு.க. தோல்வி அடைந்ததற்கு காரணமே எஸ்.ஐ.ஆர். திருத்தப்பணிகள் தான் என்று பேசி வருகிறார். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதலில் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை பெற வேண்டும்.மக்கள் தீர்ப்பை மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும். பெருந்தலைவர் காமராஜர், நல்லக்கண்ணு போன்ற தலைவர்கள் தேர்தலில் தோற்ற போது அதனை ஏற்றுக்கொண்டார்கள். அதே போன்று ஸ்டாலின் தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் தேர்தலில் வெற்றி பெற்ற தற்போதைய அரசு பற்றியும், முதல் -அமைச்சர் விஜய் பற்றியும் கொச்சையாக பேசி வருவது ஏற்புடையது அல்ல.
நடந்து முடிந்துள்ள தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா விஜயகாந்த், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈசுவரன், த.மு.மு.க. தலைவர் ஜவாகிருல்லா போன்றவர்கள் எல்லாம் பிரசாரம் செய்தார்கள். இதன் காரணமாக தான் தி.மு.க. இரண்டாவது இடத்திற்கு வந்து உள்ளது. இவர்கள் ஆதரித்து பேசவில்லை என்றால் தி.மு.க .வேட்பாளர்கள் இரண்டு தொகுதிகளிலும் டெபாசிட் இழந்திருப்பார்கள்.
மேலும் இடைத்தேர்தலில் தி.மு.க. நேரடியாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்றாலும், கிராமங்களில் கோவிலுக்கு செய்கிறோம், அதை செய்கிறோம் இதை செய்கிறோம் என கூறி ரூ.100 கோடி வரை செலவிட்டு இருக்கிறார்கள்" இவ்வாறு அவர் கூறினார்.