தமிழக செய்திகள்

புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் உடலுக்கு மு.க ஸ்டாலின் நேரில் அஞ்சலி

புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் உடலுக்கு திமுக செயல் தலைவரும் தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். #RIPNatarajan

சென்னை,

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜனுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னையை அடுத்த பெரும்பாக்கம் குளோபல் ஆஸ்பத்திரியில் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். நடராஜனுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

உடல்நிலை தேறிய நிலையில் கடந்த நவம்பர் 2-ந் தேதி நடராஜன் வீடு திரும்பினார். சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் அவர் ஓய்வெடுத்து வந்தார். அவ்வப்போது ஆஸ்பத்திரிக்கு சென்று உடல்நிலையை பரிசோதித்து வந்தார். இந்தநிலையில், நடராஜனுக்கு 17 ஆம் தேதி இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சுத்திணறலாலும் அவதிப்பட்டார். உடனடியாக அவரை, உறவினர்கள் குளோபல் ஆஸ்பத்திரியில் மீண்டும் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நடராஜன் நேற்று இரவு உயிரிழந்தார்.

சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நடராஜன் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், திமுக செயல் தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ஸ்டாலினுடன், துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட திமுகவினர் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மு.க ஸ்டாலின், புதிய பார்வை ஆசிரியர் ம. நடராஜன் மறைவு அதிர்ச்சி தரும் வகையில் அமைந்து இருக்கிறது. திராவிட இயக்கத்தின் மீது அளவு கடந்த பற்றுக்கொண்டவராக விளங்கியவர் ம.நடராஜன். மாணவர் பருவத்தில் தமிழ் மொழிக்காக நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், புதிய பார்வை பத்திரிகை அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

SCROLL FOR NEXT