சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவல் ஒரு பக்கம் அதிகரித்து வந்தாலும், மற்றொரு பக்கம் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. முதல் டோஸ் தடுப்பூசி 87.29 சதவீதம் பேருக்கும், 2-வது டோஸ் தடுப்பூசி 60.20 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது. அதாவது, 8 கோடியே 79 லட்சத்து 84 ஆயிரத்து 156 தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டுள்ளன.
தொடர்ந்து, தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்தும் முயற்சிகளும் நடந்து வருகிறது. அந்த வகையில், வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த 3-ந்தேதி முதல் 15 வயது முதல் 18 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. இதுவரை, 23 லட்சத்து 34 ஆயிரத்து 845 மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் போட்டுக்கொண்டார்
இந்த நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
தானும் ஒரு முன்கள பணியாளர் என்ற வகையில், நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டபோது, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நா.எழிலன், டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்
பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு டுவிட்டர் பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
நான் முன்கள பணியாளர் என்ற முறையில் இன்று (நேற்று) முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்) எடுத்துக்கொண்டேன். அனைத்து முன்கள பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்.
தடுப்பூசி எனும் கவசத்தை கொண்டு நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.