தமிழக செய்திகள்

கருணாநிதி குடும்பத்தின் கடைசி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருப்பார்: ஆதவ் அர்ஜுனா

கரூர் மக்கள் கண்ணீரின் பாவம் தான் கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோற்றார் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.

சென்னை,

மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-

விஜய் என்ற பெயர் உலகம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது; விஜயபாஸ்கர்களுக்கு தவெகவில் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க திமுக பல்வேறு சூழ்ச்சிகளை செய்கிறது. மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்று சேருவதற்கு முன், ஒட்டுமொத்த அதிமுகவின் உண்மையான விசுவாசிகள் தவெகவில் இணைக்கப்பட வேண்டும் என எங்கள் தலைவர் அரசியல் வியூகம் வகுத்தார். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் 90% பேர் தவெகவிற்கு வருகின்றனர்

தவெக எம்எல்ஏவை விலைக்கு வாங்க ரூ.50 கோடி வரை பேரம் பேசியுள்ளனர். நாங்கள் தேர்தலை கண்டு பயப்படவில்லை. மீண்டும் தேர்தல் வந்தால் 234 தொகுதிகளிலும் தவெக வெல்லும். முதல்-அமைச்சர் விஜய்யை பிரசாரம் செய்யவிடாமல் பல்வேறு சூழ்ச்சிகளை செய்தனர். செயற்கையான கூட்ட நெரிசல் விபத்தை ஏற்படுத்த திமுக முயற்சி செய்தது.

கடைசி 15 நாளில் எங்கள் தலைவர் ஏன் எல்லா ஊருக்கும் போகவில்லை தெரியுமா? எங்கே போலீஸ் சப்போர்ட் இருந்ததோ அங்கே தான் போக முடிந்தது. திருப்பூரில் காவல்துறை சப்போர்ட் இல்ல. போலீஸ் எல்லாரும் விலகிப் போய் மீண்டும் ஒரு கூட்ட நெரிசலை உருவாக்க நினைத்தார்கள். மரகதம் குமரவேலுக்கு பெயர் வைத்தவர் எம்ஜிஆர். அதனால்தான் திமுகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க முயற்சி செய்ததும் அதை எதிர்த்து தைரியமாக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

கரூர் மக்கள் கண்ணீரின் பாவம் தான் கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோற்றார். கருணாநிதி குடும்பத்தின் கடைசி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருப்பார். இனி லண்டனுக்கு சென்று ஸ்டாலின் குடும்பம் செட்டில் ஆக வேண்டியது தான். ஒரு ரவுடி கட்டுப்பாட்டில் உள்ள கரூரை மீட்க வேண்டும்.

கரூரில் தவெகவிற்கு ஒரு கணக்கு வழக்கு உள்ளது; கரூரின் கணக்கு வழக்கை தவெக முடிக்காமல் விடாது. கரூர் சம்பவத்தின் அனைத்து உண்மைகளும் வெளிவரும். தேர்தலை பார்த்து தவெகவிற்கு ஒரு போதும் பயமில்லை.கரூர் சம்பவம் திட்டமிட்ட தி.மு.கவின் சதி. காவல்துறையை வைத்து கரூர் கூட்ட நெரிசலை உருவாக்கியது தி.மு.க.

எந்த தொழில் செய்பவரும் நிம்மதியாக தொழில் செய்ய வேண்டும். எங்கள் குறிக்கோள் அதுதான். இப்ப சினிமா தொழில் என்னாச்சு பாருங்க. ரெட் ஜெயண்ட் மூவீஸ் ஏதாவது படத்தை ரிலீஸ் செய்யுதா? பண்ண முடியாது. இந்த 5 வருஷத்துல பண்ண சொல்லுங்க பார்ப்போம். ஏன்னா கருப்பு பணம் கிடையாது. 2 ஆயிரம் 3 ஆயிரம் தியேட்டர்களை கன்ட்ரோல் பண்ண முடியாது.

அரசியலில் வெற்றி முக்கியம், தேர்தல் அரசியல் முக்கியம். தேர்தல் அரசியல் தெரிந்த நிர்வாகிகள் இணைப்பு தேவை. தமிழ்நாட்டை உருவாக்க அடித்தளம் கொண்ட உறுதியாக கட்சி வேண்டும். அப்படி தான் அதிமுகவினர் இணைகின்றனர்.

கூடிய விரைவில் திமுகவும் அதிமுகவும் இணைந்து பிஜேபி ஆதரவோடு ஒரு மோசமான அரசியல் சூழ்நிலையை உருவாக்க உள்ளார்கள். ஸ்டாலினும் ஈபிஎஸ்ஸும் அதை அறிவிக்கும் முன்பு, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தவெகவில் இணைந்துவிடுவார்கள். இதுதான் எங்கள் பொலிட்டிகல் ஸ்ட்ராட்டஜி". இவ்வாறு அவர் கூறினார்.