சென்னை,
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மு.க.ஸ்டாலினின் பேச்சு தனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியதாக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
“மிகுந்த கோபத்துடன் எனது கண்டனத்தை நான் பதிவு செய்கிறேன். வருத்தம் என்று கூட சொல்லக் கூடாது என்று நான் நினைத்தேன். எனது வருத்தத்தை நான் பதிவு செய்யவில்லை, கண்டனத்தை பதிவு செய்கிறேன்.
முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. நான் பா.ஜ.க. மாநில தலைவராக இருந்தபோது என்னை கடுமையாக உருவ கேலி செய்தார்கள். தி.மு.க. தொண்டர்கள்தான் அவ்வாறு பேசுகிறார்கள் என்று நான் நினைத்தேன்.
ஆனால் இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுவதையும் பார்த்தால், இவர்கள்தான் அவர்களது தொண்டர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தார்களோ என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. உள்ளத்தில் இப்படிப்பட்ட எண்ணம் இல்லாவிட்டால் அது வார்த்தையில் வராது.
இந்த தலைவர்களெல்லாம் சமூகத்திற்கும் இல்லாமல், பெண்கள் முன்னேற்றத்திற்கும் இல்லாமல், சுய ஓட்டுக்காகத்தான் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இனிமேல் ஆண் தலைவர்கள் பேசும்போது எச்சரிக்கையாக பேச வேண்டும் என்று எச்சரிக்கையாகவே நான் சொல்கிறேன். ஏதோ போகிற போக்கில் என்ன வேண்டுமானாலும் இயல்பாக பேசிவிட்டு போய்விடலாம் என்று நினைக்கக் கூடாது.
பெண்கள் அரசியலுக்கு வருவதே சிரமம். எல்லோரும் இரும்பு மனம் படைத்த பெண்களாக இருந்துவிட முடியாது. எனவே அரசியலுக்கு பெண்கள் வருவதை ஆரோக்கியமானதாக பார்க்க வேண்டும்.
அரசியலில் ஆண்கள் இருக்கும் அதே நிலையில்தான் பெண்களும் இருக்கிறார்கள். ஆண் தலைவரைகள் யாரையாவது பெண் தலைவர்கள் உருவ கேலி செய்கிறோமா? அப்படியே நாங்கள் பேசினாலும் கூட மரியாதையாகத்தான் பேசுவோம்.
தொடர்ந்து பெண்களைப் பற்றி ஏன் இப்படி பேசி வருகிறீர்கள்? பெண்கள் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்று நினைக்கிறீர்களா? பெண்கள் யாரும் போட்டி போடக்கூடாது என்று நினைக்கிறீர்களா? உங்கள் கட்சியில் இருக்கும் பெண் தலைவர்கள் பற்றிய உங்கள் எண்ணம் என்ன?”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.