தமிழக செய்திகள்

மு.க.ஸ்டாலின் வருகை; நெல்லை மாநகரில் டிரோன்கள் பறக்க தடை: போலீஸ் கமிஷனர் உத்தரவு

நெல்லை மாநகர காவல் எல்லையில் இன்றும், நாளையும் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதித்து போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை,

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டது. ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை வருகை:

இதன்படி மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்வதற்காக நெல்லைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) செல்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 4.50 மணிக்கு தூத்துக்குடி செல்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் நெல்லைக்கு வருகிறார். நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். அதாவது தி.மு.க. வேட்பாளர்களான சபாநாயகர் அப்பாவு (ராதாபுரம்), அப்துல் வகாப் எம்.எல்.ஏ. (பாளையங்கோட்டை), சுப்பிரமணியன் (திருநெல்வேலி), காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி, அம்பை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

இந்த கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு செல்கிறார். இரவில் அங்கு தங்கும் அவர் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு மாலையில் அவர் செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்களான மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்), ராஜா எம்.எல்.ஏ. (வாசுதேவநல்லூர்), கலை கதிரவன் (தென்காசி), கூட்டணி கட்சியான ம.தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரன் (கடையநல்லூர்), சங்கரன்கோவில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார்.

நெல்லை மாநகரில் டிரோன்கள் பறக்க தடை உத்தரவு:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக இன்று திருநெல்வேலிக்கு வரவிருக்கும் நிலையில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய், நெல்லை மாநகர காவல் எல்லையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று (3.4.2026) காலை 6 மணி முதல் நாளை (4.4.2026) மாலை 6 மணி வரை திருநெல்வேலி மாநகர காவல் எல்லையில் டிரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Other unmanned aerial vehicles) பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. இதனை மீறும் நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாநகர காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.