தமிழக செய்திகள்

மு.க.ஸ்டாலின் இன்று கோவை பயணம்: பாராட்டு விழாவில் பங்கேற்கிறார்

கோவையில் கட்டப்பட்ட பிரமாண்ட நூலகத்துக்கு பெரியார் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கோவை,

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு உள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட நூலகத்துக்கு முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் அறிவுலகம் என்று பெயர் சூட்டினார். அப்போது பணிகள் நிறைவு பெறாததால் நூலகம் திறக்கப்படவில்லை.

இந்தநிலையில் கோவையில் கட்டப்பட்ட பிரமாண்ட நூலகத்துக்கு பெரியார் பெயர் வைத்ததற்காக திராவிடர் கழகம் சார்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு கோவை வ.உ.சி. மைதானத்தில் நடக்கிறது.

இதற்காக மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு தி.மு.க.வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து அவர் நீலாம்பூர் செல்கிறார். அங்கு ஒருங் கிணைந்த மாவட்ட தி.மு.க. அலுவலகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அவர், தனியார் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன்பிறகு வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். இரவு 8.30 மணிக்கு அவர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

விழாவையொட்டி வ.உ.சி. மைதானத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கோவை -அவினாசி சாலையின் இருபுறமும் தி.மு.க. மற்றும் திராவிடர் கழக கொடிகள் கட்டப்பட்டு உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் முதன்முறையாக கோவை வருவதால் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் முடிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT