சென்னை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சியமைத்து உள்ளது. முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்று உள்ளார்.
இந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கவர்னரை நேரில் சந்தித்து, எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்க ஆதரவளிக்கிறேன் என கூறினார். இதற்கு ஆதரவாக, மன்னார்குடி தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.காமராஜ் அவரிடம் கடிதம் அளித்துள்ளார். அதனை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கவர்னரை நேரில் சந்தித்து வழங்கினார்.
கடிதம் அளித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். அ.ம.மு.க. எம்.எல்.ஏ. ஆதரவு எங்களுக்கு உள்ளது என்று கவர்னரிடம், த.வெ.க. சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது.
அ.ம.மு.க. எம்.எல்.ஏ. காமராஜை காணவில்லை. அவர் விலை போய் இருக்கலாம் என்றார். விஜய் பதவி வெறியில் இருக்கிறார். த.வெ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்றும் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, அ.ம.மு.க. எம்.எல்.ஏ., எஸ்.காமராஜ் மக்கள் மாளிகைக்கு சென்றார். அவர்கள் இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது, டி.டி.வி. தினகரன் கூறும்போது, கவர்னரிடம் கொடுத்த கடிதத்திற்கும் காமராஜுக்கும் தொடர்பு இல்லை. அந்த கடிதம் போலியானது. காமராஜ் பெயரில் கவர்னருக்கு வாட்ஸ்அப் மூலம் போலி கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது என கூறினார்.
ஒரேயொரு கடித நகலை கொடுத்து எங்களுடைய எம்.எல்.ஏ.வை தூக்க பார்த்துள்ளனர். உலகத்திலேயே கேள்விப்படாத வகையில் மோசடி வேலையில் ஈடுபட்டு உள்ளனர். மோசடி வேலை செய்வதுதான் தூய சக்தியின் வேலையா? என த.வெ.க.வுக்கு எதிராக டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.
இந்த சூழலில், இன்று காலை சட்டமன்றம் கூடியபோது, த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிக்கிறேன் என அ.ம.மு.க. எம்.எல்.ஏ. காமராஜ் அவையில் பேசினார். இந்த நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்கி டி.டி.வி. தினகரன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள செய்தியில், அ.ம.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.காமராஜ், கட்சியின் நிலைப்பாட்டை மீறி சட்டமன்றத்தில் தன்னிச்சையாக த.வெ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளார். கட்சியின் குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட காரணத்திற்காக அவர் நீக்கப்படுகிறார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.