கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பத்மஜாவுக்கு. த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தியை அனுப்பியதாக கூறப்படும் புகார் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவத்தை கண்டித்தும், பாரபட்சமின்றி உரிய விசாரணை செய்து தவறிழைத்தவர் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் நேற்று கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மோகன் பேசிக்கொண்டிருந்த போது, ராகேஷ் எம்.எல்.ஏ. திடீரென ஆர்ப்பாட்ட மேடையில் இருந்து கீழே இறங்கி, தனது காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இதுகுறித்து விசாரித்தபோது, ஆர்ப்பாட்டத்தின் போது பேசுவதற்காக ராகேஷ் எம்.எல்.ஏ. மைக் கேட்டதாகவும், அதற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு மறுப்பு தெரிவித்ததாகவும், இதனால் கோபமடைந்த ராகேஷ் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராகேஷ் எம்.எல்.ஏ., சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் தனது வெற்றிக்கு எதிராக கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் குமரகுரு பல்வேறு விதமான இடையூறுகளை செய்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
மேலும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழாவில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் குமரகுரு இல்லாமல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதனால் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருக்கும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருக்கும் இடையே உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தரப்பில் பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.