தமிழக செய்திகள்

4 மாநிலங்களில் வாக்கு சீட்டு முறையில் எம்.எல்.சி தேர்தல்; காங்கிரஸ் எத்தனை இடங்களில் வென்றது தெரியுமா? - பிரதமர் மோடி கிண்டல்

28 எம்.எல்.சி. தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு சீட்டு முறையில் நடைபெற்றது.

புதுடெல்லி,

4 மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற எம்.எல்.சி. தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் மோசமான தோல்வியை சுட்டிக்காட்டும் வகையில் பிரதமர் மோடி பதிவு வெளியிட்டுள்ளார்.

எம்.எல்.சி. தேர்தல்

கர்நாடகா, உத்தர பிரதேசம், பீகார் மற்றும் மராட்டிய மாநிலம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் 28 இடங்களுக்கு சட்டமேலவை(எம்.எல்.சி.) தேர்தல் நடைபெற்றது. வாக்கு சீட்டு முறையில் நடைபெற்ற இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

தேர்தல் முடிவுகள்

குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்தாலும், அங்கு தேர்தல் நடைபெற்ற 4 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. அதே சமயம் பா.ஜ.க. கர்நாடகத்தில் 3 இடங்களிலும், உத்தர பிரதேசத்தில் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மராட்டிய மாநிலத்தில் 5 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் தற்போது வரை 3 இடங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலவரப்படி மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பிரதமர் மோடி பதிவு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், வாக்கு சீட்டு முறையில் நடைபெற்ற எம்.எல்.சி. தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாததை சுட்டிக்காட்டும் வகையில் பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

“உத்தர பிரதேசம், மராட்டிய மாநிலம், பீகார் மற்றும் கர்நாடகா ஆகிய 4 பெரிய மாநிலங்களில் உள்ள 28 எம்.எல்.சி. தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி தேர்தல் நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது என்று யூகிக்க முடியுமா?”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT