தென்காசி,
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் பொதுவாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மிகச்சிறப்பாகவும் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும்படியும் இருக்கும். மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் சீசன் மேலும் சில நாட்கள் வரை இருக்கும்.
எல் நினோ காரணமாக இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாகவே பெய்தது. இதனால் குற்றால அருவிகளில் சீசன் நாட்களிலும் குறைந்த அளவே நீர்வரத்து இருந்தது. இதற்கிடையே கடந்த வாரம் பழைய அருவில், புலியருவியில் தண்ணீர் வரத்து இன்றி முற்றிலும் வறண்டு காணப்பட்டது. இதனால் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளுக்கு மிதமான அளவில் தண்ணீர் வரத்து உள்ளது. ஐந்தருவியில் மிதமான அளவில் தண்ணீர் வருவதால், சுற்றுலா பயணிகள் தற்போது உற்சாகத்துடன் குளித்து வருகின்றனர்.