சென்னை,
தருமபுரி மாவட்டம் சோகத்தூரில் ரூ.19.20 கோடி செலவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார்.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், தருமபுரி மாவட்டம், சோகத்தூரில் 19 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகத்தைத் திறந்து வைத்தார். சோகத்தூரில் சுமார் 80,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகம், பட்டுக்கூடு விற்பனை மற்றும் கொள்முதல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியானது, மாநிலத்தின் முக்கியமான பட்டுக்கூடு விற்பனை மையங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளாக முன்னோடி அரசு பட்டுக்கூடு அங்காடியாகச் செயல்பட்டுவரும் தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில், ஆண்டொன்றுக்கு சராசரியாக சுமார் 600 மெட்ரிக் டன் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன்மூலம், சுமார் 15 முதல் 20 மாவட்டங்களில் உள்ள பட்டு விவசாயிகளால் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், பட்டுக்கூடு வரத்தினை அதிகரித்து, எதிர்கால பட்டுநூற்பாளர்களின் தேவையை நிவர்த்தி செய்திடும் பொருட்டும், பட்டு விவசாயிகள் பொருளாதார மேம்பாடு அடைந்திடவும், ஒருங்கிணைந்த முறையில் அனைத்துக் கட்டமைப்புகளுடன் கூடிய புதிய ஒருங்கிணைந்த அங்காடி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வளாகத்தில், பட்டுக்கூடு விற்பனைக்கான பிரத்யேகக் கட்டடம், ஆண் மற்றும் பெண் விவசாயிகள் மற்றும் பட்டு நூற்பாளர்களுக்கான தனித்தனி காத்திருப்புக் கூடம், உணவகம், வாகன நிறுத்துமிடம், அணுகுசாலை, மின்சார வசதி, ஆழ்துளைக் கிணறு மற்றும் குடிநீர் வசதிகள், பட்டு வளர்ப்புக்குத் தேவையான இடுபொருட்கள் விற்பனை மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், அலுவலர் குடியிருப்புகள், தொழில்நுட்ப சேவை மையம், விவசாயிகள் பயிற்சி மையம் ஆகிய 9 கட்டடங்கள் புனரமைக்கப்பட்டு, வளாகத்தைச் சுற்றி 1,110 மீட்டர் நீளத்திற்கு சுற்றுச்சுவரும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகம் திறந்து வைக்கப்பட்டதன் மூலம், பட்டுக்கூடு விற்பனை மற்றும் கொள்முதல் நடவடிக்கைகள் மேலும் மேம்படுவதுடன், மின் ஏலமுறையின் மூலம் விவசாயிகளுக்கு வெளிப்படையான மற்றும் சீரான விற்பனைப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள வழிவகை செய்யப்படும். குறிப்பாக, தொலைதூர மாவட்டங்களிலிருந்து பட்டுக்கூடுகளைக் கொண்டுவரும் விவசாயிகள் மற்றும் பட்டு நூற்பாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஒரே இடத்தில் கிடைக்கப்பெறும்.
இத்தகைய தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் மூலம் பட்டுவளர்ச்சித் துறையை அனைத்து நிலைகளிலும் மேம்படுத்தி, தமிழ்நாட்டைத் தேசிய அளவில் பட்டு உற்பத்தியில் முதல் மாநிலமாக உருவாக்கிடவும், பட்டுத் தொழிலில் ஈடுபடும் அனைத்துப் பங்குதாரர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்திடவும், தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இப்புதிய ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகத்தின் மூலம், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலுள்ள பட்டு விவசாயிகள், பட்டு நூற்பாளர்கள் மற்றும் பட்டு முறுக்கேற்றுபவர்கள் பயன்பெறுவர்.
இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா, தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை செயலாளர் ஆர். லில்லி, பட்டு வளர்ச்சித் துறை இயக்குநர் ரெ.சதீஸ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.