கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

மோடி மீண்டும் பிரதமர் ஆவார் - மதுரை ஆதீனம் பேட்டி

2024-ல் பா.ஜ.க. வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்று மதுரை ஆதீனம் கூறினார்.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து தரிசனம் செய்தார். அம்மன் சன்னதி வாசலில் பிரதமர் மோடியை அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், சிவாச்சாரியார்கள் வரவேற்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, பொற்றாமரைக்குளம் உள்பட பிரகாரங்களில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார். சுமார் அரை மணி நேரம் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முன்னதாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அம்மன் சன்னதி வாசல் வழியாக பிரதமர் மோடி வந்துகொண்டிருந்தபோது அவரை வரவேற்க மதுரை ஆதீனம் நின்றுகொண்டிருந்தார். மதுரை ஆதீனத்தை பார்த்தும் பிரதமர் மோடி காரை நிறுத்தினார். அப்போது காருக்கு அருகில் சென்று பிரதமர் மோடிக்கு மதுரை ஆதீனம் பொன்னாடை அணிவித்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் மதுரை ஆதீனம் கூறுகையில், பிரதமர் மோடியை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கச்சத்தீவு மீட்க வேண்டும், இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். 2024-ல் பா.ஜ.க. வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார். மோடி மீண்டும் பிரதமராக என்னுடைய ஆதரவும், ஆசீர்வாதமும் என்றென்றும் உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT