தமிழக செய்திகள்

பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என கூறி பணம் மோசடி - 4 பேர் கைது

ஆன்லைன் மூலம் இவர்கள் பலரிடம் இதுபோல் பண மோசடியில் ஈடுபட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

திருப்பூர்,

திருப்பூர் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (28). பனியன் நிறுவன தொழிலாளியான இவரது செல்போன் எண்ணுக்கு சமீபத்தில் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில், திருப்பூரில் குறிப்பிட்ட லாட்ஜ்களில் பெண்கள் இருப்பதாகவும், பணம் அனுப்பினால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் ஆசைப்பட்ட சந்தோஷ்குமார், சம்பந்தப்பட்ட செயலி மூலம் தொடர்பு கொண்டார். அப்போது பெண்களின் புகைப்படங்களை அனுப்பி வைத்து பணம் கேட்டுள்ளனர். பின்னர் லாட்ஜ் விவரங்களையும் அனுப்பி வைத்து தொடர்ந்து பணம் பறித்துள்ளனர்.

இதற்காக க்யூஆர் கோடு அனுப்பி வைத்து சந்தோஷ்குமாரிடம் இருந்து முதலில் ரூ.4 ஆயிரம் பெற்றுள்ளனர். தொடர்ந்து மேலும் ரூ.2 ஆயிரம் அனுப்புமாறு கேட்டுள்ளனர். அப்போது தான் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சந்தோஷ்குமார், திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த மோசடி சம்பவம் தொடர்பாக திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த வெற்றிவேல் (41), சக்திவிக்னேஷ் (24), கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த கோகுல்குமார் (35), அருண்பிரசாத் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் வெற்றிவேல் ஓட்டல் தொழிலாளி என்றும், கோகுல்குமார் பொறியியல் பட்டதாரி என்றும், அருண்பிரசாத் பெயிண்டர் என்றும் தெரியவந்தது. மேலும், இவர்கள் இணைந்து ஆன்லைன் மூலம் பலரிடம் இதுபோல் பண மோசடியில் ஈடுபட்டதும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.