ஆரல்வாய்மொழி,
குமரி மாவட்டம் மேல நெய்யூர் சிராயன்விளையை சேர்ந்தவர் கிரேட் பிரின்ஸ் ராஜ் (வயது 31), ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். தோவாளை தேவர் நகரில் வசிப்பவர் நாகசுமன் (26). இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. கிரேட் பிரின்ஸ் ராஜிக்கு கிருஷ்ணவேணி உறவினர் ஆவார்.
இந்தநிலையில் கிரேட் பிரின்ஸ் ராஜ் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறேன். எனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. அப்போது உறவினரான கிருஷ்ணவேணி, உங்கள் குடும்ப சொத்தை என் கணவர் மூலம் வழக்கு போட்டு பெற்று தருவதாக கூறி தவணை முறையில் ரூ.5 லட்சத்து 93 ஆயிரத்து 390-ம், ஒரு காரையும் வாங்கி விட்டு திருப்பி தரவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன்பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் நாகசுமன், கிருஷ்ணவேணி ஆகி யோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இதற்கிடையே காரை பறிமுதல் செய்தனர். இந்தநிலையில் நேற்று இருவரும் தோவாளை வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் பச்சைமால், சப்-இன்ஸ்பெக்டர் அனுஜன் மற்றும் போலீசார் விரைந்தனர். அங்கு நாகசுமனை கைது செய்ய முயன்ற போது அவரது மனைவி கிருஷ்ணவேணி போலீசாரை தடுத்துள்ளார். ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிகிறது.
அந்த சமயத்தில் கிருஷ்ணவேணி தன்னுடைய நாயை ஏவியுள்ளார். அந்த நாய், சப்-இன்ஸ்பெக்டர் அனுஜனை திடீரென கடித்தது. இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் கணவன்-மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நாகசுமன் மீது மதுரை தெப்பக்குளம், அண்ணா நகர், நீலகிரி மாவட்டம் ஊட்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பணம் மோசடி வழக்கில் தம்பதியை பிடிக்க சென்ற போது நாயை ஏவி சப்-இன்ஸ்பெக்டரை கடிக்க வைத்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.