பழனி,
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் திரளான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் கோவிலில் தரிசனம் முடித்த பின்பு அங்குள்ள உண்டியல்களில் பணம், நகை, நவதானியங்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன், அதிலுள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணி அளவிடப்படுகிறது.
அதன்படி கடந்த மாதம் 13-ந்தேதி பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இந்நிலையில் நேற்று பழனி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதற்கு கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில், துணை ஆணையர் வெங்கடேஷ், முதல் நிலை கணக்கு அலுவலர் குருநாதன் மேலாளர் உமா ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை கார்த்திகை மண்டபத்தில் வைத்து தனித்தனியாக பிரிக்கப்பட்டு எண் ணப்பட்டது. இதன்மூலம் ரூ.3 கோடியே 4 லட்சத்து 48 ஆயிரத்து 750-ம். தங்கம் 746 கிராம். வெள்ளி 7560 கிராம். வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 730-ம் கிடைத்தன. இதேபோல் திருஆவினன்குடி கோவிலில் ரூ.18 லட்சத்து 81 ஆயிரத்து 804. இடும்பன் மலையில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 32. மீனாட்சி அம்மன் கோவிலில் ரூ.23 ஆயிரத்து 546, அழகு நாச்சியம்மன் கோவிலில் ரூ.15 ஆயிரத்து 170. வனதுர்க்கை அம்மன் கோவிலில், ரூ.35 ஆயிரத்து 799, வீரதுர்க்கை அம்மன் கோவிலில் 58 ஆயிரத்து 400. மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் 51 ஆயிரத்து 422 கிடைத்தது. இதன் மூலம் மொத்தம் ரூ.3 கோடியே 27 லட்சத்து 4 ஆயிரத்து 923-ம் கிடைத்தது. உண்டியல் எண்ணும் பணி இன்றும் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.