தமிழக செய்திகள்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்: தன்னார்வலர்களுடன் மாநகராட்சி கலந்தாய்வு

கலந்தாய்வில் முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட மக்களை மீட்டு பாதுகாத்திடும் செயல்விளக்கங்கள் வழங்கப்பட்டது.

சென்னை,

தெற்கு வட்டாரத்தில் உள்ள வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள குடியிருப்பு நலச்சங்கப் பிரதிநதிகள் மற்றும் தன்னார்வலர்களுடன் மாநகராட்சி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

கலந்தாய்வுக் கூட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அவசர காலங்களில் மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகள் செயல் விளக்கங்கள் குறித்தும் குடியிருப்பு நலச்சங்கங்கள் உள்ளிட்ட தன்னார்வலர்கள் பங்கேற்ற, சேவையாற்றுவது குறித்தும், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள குடியிருப்பு நலச்சங்கப் பிரதிநதிகள் மற்றும் தன்னார்வலர்களுடன் மாநகராட்சி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பங்கேற்று கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டங்களில் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நடைபெற்று வரும் பணிகள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன வெள்ள மீட்பு மற்றும் நிவாரண மையங்கள், மையப்படுத்தப்பட்ட சமையல் கூடங்கள், மருத்துவமனைகள், அவசரகால அழைப்புகள், மீட்புப் படகுகள் வைக்கப்பட்டுள்ள விவரங்கள், குடிநீர் விநியோகம், தன்னார்வலர்களாக நம்ம சென்னை செயலியில் பதிவு செய்தல், குடியிருப்பு நலச் சங்கங்கத்தினர் உள்ளிட்ட தன்னார்வலர்களின் பங்களிப்பு உள்ளிட்ட அனைத்துத் தகவல்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அலுவலர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மக்களை மீட்க செயல்விளக்கங்கள்

மேலும் அரக்கோணத்தில் இருந்து வருகை புரிந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அவசர காலங்களில் மக்களுக்கான முன்னெச்சரிக்கைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட மக்களை மீட்டு பாதுகாத்திடும் செயல்விளக்கங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில், மாமன்ற உறுப்பினர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், நீர்வளத்துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகளின் அலுவலர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், அனைத்து குடியிருப்பு நல சங்கத்தினர், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT