தமிழக செய்திகள்

நெல்லை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

நெல்லை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மாவட்ட காவல்துறையின் வாகனங்களை ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம், மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும், ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.

இதற்கு முன்னதாக திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மாவட்ட காவல்துறையின் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் காவலர்கள் அவசர காலங்களில் பணிக்கு செல்லும் இருசக்கர வாகனங்கள், உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்கள், நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறதா என மாவட்ட எஸ்.பி. ஆய்வு மேற்கொண்டு வாகன ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கி, வாகனங்களின் நிறை குறைகளை கேட்டு தெரிந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஏ.டி.எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள், அரசு வழக்கறிஞர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT