அக்ஷய் 
தமிழக செய்திகள்

பல்லடத்தில் வீடு புகுந்து தாய், மகள் வெட்டிக்கொலை

தாயின் எதிர்ப்பு காரணமாக, பூவரசி தனது காதலனுடன் செல்ல மறுத்து காதலைத் துண்டித்தார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வீடு புகுந்து காதலி மற்றும் அவரது தாயை வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

ரகசிய திருமணம்- எதிர்ப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பூவரசி. அவரும் அக்ஷய் என்ற இளைஞரும் கடந்த 5 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் பெற்றோர்களுக்குத் தெரியாமல் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனர். இந்த விவகாரம் பூவரசியின் குடும்பத்திற்குத் தெரியவந்தபோது, அவரது தாய் தனலட்சுமி இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அரிவாள் வெட்டு- உயிரிழப்பு

தாயின் எதிர்ப்பு காரணமாக, பூவரசி தனது காதலனுடன் செல்ல மறுத்து காதலைத் துண்டித்தார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அக்ஷய், இன்று (செவ்வாய்க்கிழமை) பூவரசியின் வீட்டிற்குள் அதிரடியாகப் புகுந்தார். அங்கு அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே, அக்ஷய் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பூவரசி மற்றும் அவரது தாய் தனலட்சுமி ஆகிய இருவரையும் கொடூரமாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இளைஞர் கைது

அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக முயன்ற கொலையாளி அக்ஷயைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த இரட்டைக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.